அதிகரிக்கும் நீர்திறப்பு! - தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | CWC issues flood advisory warning to 11 districts of Taminadu

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (16/08/2018)

கடைசி தொடர்பு:17:02 (16/08/2018)

அதிகரிக்கும் நீர்திறப்பு! - தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பால் தமிழகத்தின் காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் ஆகியவற்றுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை 

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளாவின் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கிறது. கனமழையால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி ஆகிய அணைகளிலிருந்து 2.1 லட்சம் கனஅடி அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், தமிழகத்தின் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு தமிழக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ``கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளிலிருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள 2.1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர், இரண்டு நாள்களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரிக் கரையோர மக்களுக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட இருப்பது குறித்து எச்சரிக்கை செய்வதுடன், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, மேட்டூர் அணை மற்றும் பவானி சாகர் அணை ஆகிய அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு (2.5 முதல் 2.6 லட்சம் கனஅடி நீர்) குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு (2.6 முதல் 2.8 லட்சம் கனஅடி) குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

வெள்ளம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்வள ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.