வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:17:20 (16/08/2018)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம் - டெல்லி செல்கிறார் மு.க.ஸ்டாலின்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நலம் விசாரிக்க டெல்லி செல்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்


பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும் சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால், பா.ஜ.க வட்டாரம் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதேபோல துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று காலை நேரில் சென்று உடல்நிலைகுறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் வாஜ்பாய் உடல்நிலைகுறித்து விசாரிப்பதற்காகத் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.