`கைதாகிறாரா விக்கிரமராஜா?' - நாடார் சங்கப் பண மோசடி விவகாரத்தில் பரபர திருப்பம்

`கைதாகிறாரா விக்கிரமராஜா?' - நாடார் சங்கப் பண மோசடி விவகாரத்தில் பரபர திருப்பம்

13 கோடி ரூபாய் மோசடிப் புகாரில், வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் வணிகர்களின் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்துவந்த விக்கிரமராஜா உள்ளிட்ட 7 பேர், சங்கப் பணத்தில் சுமார் 13 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாகச் சங்கத்தின் தலைவர் பத்மநாபன் ஏற்கெனவே சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்திருந்தார். இதுகுறித்து, 25.12.2016 மற்றும் 22.10.2017 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்களில் `வில்லங்கம் செய்தாரா விக்கிரமராஜா?', 'விக்கிரமராஜாவுக்கு எதிராக வரிசைக்கட்டும் புகார்கள்' என்ற தலைப்புகளின் கீழ், விரிவான கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், விக்கிரமராஜாவைக் கைது செய்து விசாரிக்குமாறு, நாடார் சங்கத்தினர் தொடுத்திருந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (14.8.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விக்கிரமராஜா உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக' மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

மோசடி குறித்த ஆய்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்ட தங்கம் செல்வராஜிடம் பேசினோம்... ``கடந்த வருடம் நாங்கள் கொடுத்திருந்த புகாரின்பேரில் காவல்துறை இப்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை நாள்களும் தனது தனிப்பட்ட செல்வாக்கால், தப்பிவந்த விக்கிரமராஜா மீது விரைவில் போலீஸார் விசாரணையைத் தொடங்குவார்கள். அப்போது அவருக்கு உடந்தையாக இருந்த நபர்களும் கைதாகி சிறைக்குள் செல்வார்கள்.

ஆய்வுக்குழு மூலமாக நாங்கள் சோதனை செய்து, அளித்த இடைக்கால அறிக்கையின்படி விக்கிரமராஜாவும் அவரின் கூட்டாளிகளும் 13 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக இவர்களது ஊழல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொள்ளும்போது, இந்தத் தொகையானது 26 கோடி, 39 கோடி என இன்னும் உயரலாம் என்று எதிர்பார்க்கிறோம். இவ்விஷயத்தில், விக்கிரமராஜாவுக்கு உடந்தையாகச் செயல்பட்ட வேறு சிலரும் அப்போது சிக்குவார்கள்.

விக்கிரமராஜா

விரைவில் விக்கிரமராஜா கைதாகும் சூழல் ஏற்படும். எனவே, ஊழல் செய்த பணத்தில் பாதித் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தால் மட்டுமே விக்கிரமராஜாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று அடுத்ததாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்போகிறோம்'' என்றார் முன்னெச்சரிக்கையுடன்.

ஆய்வுக்குழு உறுப்பினரும் கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளருமான ராஜ்குமார், இவ்விவகாரம் குறித்துப் பேசும்போது, ''நாடார் சங்கத்தின் பதவிகளில் இருந்துகொண்டு, சங்கப் பணத்தைக் கொண்டே 'ராமச்சந்திரா அறக்கட்டளை' என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து 2015-ம் ஆண்டே நான் புகார் கொடுத்திருக்கிறேன். விக்கிரமராஜா உள்ளிட்ட சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். 3 வருடங்களுக்குப் பிறகு, இன்று காலையில்தான் இவர்கள் மீதும் புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளது. 

இதற்கிடையில், அறக்கட்டளையின் கீழ் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பள்ளியின் அனுமதி விவகாரத்திலும் ஏகப்பட்டக் குளறுபடிகள் உள்ளன. எனவே இந்தப் பள்ளியில் படித்துவரும் சுமார் 700 மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது'' என்றார் பதைபதைப்போடு.

நாடார் சங்கத்துக்குள் புகைந்துகொண்டிருக்கும் ஊழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் அரசியல் புள்ளிகள் சிலர், ''விக்கிரமராஜா தன்னைத் தி.மு.க ஆதரவாளராக முன்னிறுத்திக்கொள்வதால், ஆளும் கட்சி விக்கிரமராஜாவுக்கு எதிராகவே உள்ளது. எனவே, விரைவில் அவர் கைதாகும் சூழ்நிலை ஏற்படும்'' என்கின்றனர்.

இந்நிலையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கருத்தை அறிந்துகொள்ளும் நோக்கில், அவரது செல்பேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். நமது அழைப்பை ஏற்கவில்லை அவர். குறுஞ்செய்தி அனுப்பினோம்... அதற்கும் பதில் வரவில்லை.
காவல்துறையினரின் விசாரணையில் வெளிச்சம் பிறக்கட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!