வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (16/08/2018)

கடைசி தொடர்பு:18:05 (16/08/2018)

`ரூ.750 கோடி இழப்பீடு தொடர்பாக நீதிமன்ற நோட்டீஸ் இதுவரை கிடைக்கவில்லை!' - ஸ்டெர்லைட் நிர்வாகம்

ரூ.750 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுப்பிய நோட்டீஸ் இதுவரை கிடைக்கவில்லை என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின் 100 வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது கலவரம் வெடித்தது. இதையடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ரூ.750 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறி சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலைச் சேர்ந்த விஜய் நிவாஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 கோடி இழப்பீடாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தர வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைக்க, ஆலை நிர்வாகம் ரூ.620 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு உத்தரவிட்டனர். 

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இழப்பீடு கோரும் வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை அனுப்பிய நோட்டீஸ், இதுவரைத் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து மும்பை பங்குச் சந்தைக்கு வேதாந்தா நிறுவனம் அனுப்பியுள்ள இ-மெயிலில், `உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரூ.750 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸ் ஆகியவை இதுவரை எங்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. அவை கிடைத்த பின்னர், இந்த விவகாரத்தில் அடுத்த நடவடிக்கைகள் குறித்து உரிய முறையில் தகவல் தெரிவிப்போம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.