45 கிலோவாகக் குறைந்த யூரியா மூட்டை! - மாலை அணிவித்துப் போராடிய விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த 50 கிலோ எடை உள்ள யூரியா உர மூட்டையை 45 கிலோவாக அரசு குறைத்துள்ளதைக் கண்டித்து, உர மூட்டைக்கு மாலை அணிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர் விவசாயிகள்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சென்னையைத் தவிர, மற்ற 31 மாவட்டங்களில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் 9 டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 22 மாவட்டஙகளில் மானாவாரியாக விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் புரட்டாசி முதல் வாரத்தில் பருப்பு வகைகள், சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். 

இந்நிலையில், விவசாய நிலங்களில் மேல் உரமாகப் பயன்படுத்தப்படும் 50 கிலோ எடை கொண்ட யூரிவாயை 45 கிலோவாக குறைத்து, விலையில் எந்தவித மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் விவசாயிகள். யூரியா மூட்டையின் எடையில் மாற்றம் செய்ததைக் கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின்போது, யூரியா மூட்டைகளைத் தூக்கி வந்து, அதற்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

விவசாயிகள் போராட்டம்

கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜனிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடிக்காக 1,70,000 ஹெக்டேர் ஏக்கர் மானாவாரி நிலங்கள் விவசாயத்துக்காகத் தயார்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. இதில் அடி உரமாக 10,000 டன் டி.ஏ.பி உரம் தேவைப்படுகிறது. அந்தப் பயிர்கள் முளைத்து வளரும் நிலையில் மேல் உரமாக இரண்டு முறை யூரியா  பயன்படுத்தப்படுகிறது. டி.ஏ.பி உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை மானியம் இல்லாமல் சந்தையில் ரூ.1,867-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தைக் கழித்து 1 மூட்டை ரூ.1,330-க்கும், மேல் உரமான யூரியா மானியம் அல்லாமல் சந்தையில் 50 கிலோ மூட்டை ரூ.850-க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசின் மானியம் கழித்து 50 கிலோ கொண்ட யூரியா மூட்டை ரூ.266.50-க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் யூரியாவை 45 கிலோ மூட்டையாக எடையைக் குறைத்து பழைய விலையிலேயே ரூ266.50-க்கு விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளனர். இது விவசாயிகளைப் பழி வாங்கும் செயலாகும். இந்த நடவடிக்கையை கைவிட்டு, கடந்த ஆண்டைப்போல எடை குறைக்காமல் விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!