சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு | No intention of dissolving the idol wing, TN Government informs Madras HC

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:20:20 (16/08/2018)

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

''சிலை கடத்தல் தடுப்பு பிரிவைக் கலைக்கும் எண்ணம் இல்லை'' என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் தமிழக அரசு


சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் பரிந்துரை செய்யப்பட்டது என்பது தொடர்பாகத் தமிழக அரசு விரிவான பதிலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில்,`புலன் விசாரணையைத் திசை திருப்பும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. நியாயமான விசாரணை நடப்பதை உறுதி செய்யவே சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அரசு தன் கடமையைச் செய்துள்ளது. அதற்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது. சிலை கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தூண்டுதலில் இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. தனி நபர்களின் பயனுக்காக இந்த வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டவில்லை. பொன்.மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக விசாரணை நடத்தியபோதிலும் இதுவரை ஓர் அறிக்கைகூட அளிக்கப்படவில்லை. காவல்துறைத் தலைவர் அழைக்கும் ஆய்வுக் கூட்டத்துக்கும் அவர் வருவதில்லை.

பலமுறை கோரிக்கை விடுத்தும் பொன்.மாணிக்கவேல் மேற்கொண்ட விசாரணை குறித்த விவரங்களை வழங்கவில்லை. சிலை கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதன் காரணமாகவும் பல மாநில அரசுகளும் வெளிநாடுகளும் சம்பந்தப்பட்டிருப்பதாலும் விசாரணையை சி.பி.ஐ-க்கு பரிந்துரை செய்யப்பட்டது. புலன் விசாரணையில் 113 வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பதிலுக்கு காத்திருக்கிறோம். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. புலன் விசாரணையை நேர்மையாக நடத்தி, குற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கவே விசாரானை சி.பி.ஐ-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை. அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.