வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (16/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (16/08/2018)

தேங்காய்ப்பட்டணம் கடலில் மாயமான மீனவர்கள்! - இரண்டாவது நாளாகத் தொடரும் தேடுதல் பணி

தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் படகை நிறுத்திவிட்டு கரைக்குத் திரும்பிய மீனவர்கள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக நடந்து வருகிறது.

மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கடல் அலைகள் அசாதாரணமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இணையம் புத்தன்துறையைச் சேர்ந்த சுஜின், சுனில் ஆகியோர் கரைக்கு நீந்தி வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். சுஜின், சுனில் ஆகியோர் உடன்பிறந்த சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மீனவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். நேற்று தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும்பணி இன்றும் தொடர்ந்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உடன்பிறந்த சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.