கோபாலபுரம் இல்லத்தில் மண்டியிட்டு கருணாநிதிக்கு இரங்கற்பா வாசித்த மாற்றுத்திறனாளி மாணவி!

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு கோபாலபுரம் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மாணவி வாசித்த இரங்கற்பா மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

கருணாநிதி
 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. `ஊனமுற்றோர்' என்ற வார்த்தையை `மாற்றுத்திறனாளிகள்' என்று சட்டபூர்வமாக மாற்றியவர் கருணாநிதிதான். அதேபோன்று மூன்றாம் பாலினத்தவருக்கு திருநங்கை என்ற அங்கீகாரத்தை கொடுத்ததும் கருணாநிதிதான். அவர்களுக்கு சிறப்புத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள், உதவித்தொகைகள்  என அறிமுகப்படுத்தினார். கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவருக்காக செய்த பிரார்த்தனைகள் மறக்க முடியாதது.  

கருணாநிதி
 

இந்த நிலையில், கருணாநிதிக்கு நன்றியும் அஞ்சலியும் செலுத்தும் விதமாக மாற்றுத்திறனாளி மாணவி ஷர்மிளா இரங்கற்பா வாசித்துள்ளார். சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள காதுகேளாதோர் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடையோர் பயிலும் லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பள்ளியில் 12-ம் வகுப்புப் படிக்கும் ஷர்மிளா என்ற மாணவி, தன் பள்ளி முதல்வர்கள் பர்வின், ஜெஸிந்தா ரோஸ்லின், ஆசிரியைகள் உள்ளிட்டோருடன்  இன்று கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். இவர்களுடன் காதுகேளாதோர் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தீபஸ்ரீயும் சென்றார்.

கலைஞர் இரங்கற்பா
 

கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு முன் மண்டியிட்டு, ப்ரெயில் முறையில் எழுதப்பட்டிருந்த இரங்கற்பாவை வாசித்தார். பின்னர் அதை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இரங்கற்பா இறுதியில்  ``வாழ்த்தட்டும் இத்தலைமுறை.. வணங்கட்டும் இனிவரும் தலைமுறை.. என்றும் நன்றியோடும் பிரார்த்தனைகளோடும்..” என்று வாசித்து முடிக்கையில் அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கின! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!