வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/08/2018)

கடைசி தொடர்பு:21:20 (16/08/2018)

கேரளாவில் தொடரும் சோகம் - நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!

கேரளா நெம்மாரா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவு

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பாலக்காடு, வயநாடு, இடுக்கி போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே, அலுசேரி பகுதியில், இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகள் உருண்டு விழுந்து மூன்று வீடுகள் தரைமட்டமாகின. இந்தக் கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கங்காதரன், அவரின் மனைவி சுபத்ரா, இவர்களின் மகள் ஆதிரா, ஆதிராவின் இரண்டு வயது ஆண் குழந்தை, அபிஜித், ஆர்யா, அனிதா ஆகியோர் உயிரிழந்தனர்.

நெம்மாரா நிலச்சரிவு

மேலும், அகிலா, கல்யாணி, சுனிதா, மணிகண்டன், பிரவீன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். குறிப்பாக, 4-க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நெல்லியம்பதி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ஜே.சி.பி, பொக்லைன் உதவியுடன் மாயமானவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல, திருச்சூர் மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.