`பகுத்தறிவுள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது!’ - தினகரனுக்கு ஜெய் ஆனந்த் பதிலடி

டி.டி.வி.தினகரன், ஜெய் ஆனந்த் இடையே கடும் வார்த்தை யுத்தம் நடந்துவருகிறது. `ஏழரைச் சனி ஒழிந்துவிட்டது’ என்று ஜெய் ஆனந்த் அண்மையில்  தினகரனை விமர்சித்துப் பேசியிருந்தார்.

ஜெய் ஆனந்த் , தினகரன்
 

ஜெய் ஆனந்தின் விமர்சனம் குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன் `ஜெய் ஆனந்த் ஒரு கத்துக்குட்டி அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவருடைய பேச்சு இந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளது. இவர்கள் வெறும் தற்காலிகம்தான். நாங்கள்தான் தமிழக அரசியலில் நிரந்தரம்’ என்று காட்டமாகப் பேசினார். தினகரனின் கருத்துக்கு ஜெய் ஆனந்த் பதில் அளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ``ஒடுக்கப்பட்டவர்களும் கழிக்கப்பட்டவர்களும் எங்கள் கட்சியில் இருப்பதாகக் கூறினீர். ஆனால், உங்கள் கட்சியில் அ.தி.மு.க-வில் ஒதுக்கப்பட்டவரும் கழிக்கப்பட்டவரும் இருப்பதை மறந்து விடாதீர்கள் அம்மாவின் வாரிசு என பெருமிதம் கொள்வதற்கு முன்பு  அவர் நியமித்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எத்தனை பேர் உங்கள் பக்கம் என யோசித்துப் பாருங்கள். நாங்கள் தனியாக இருப்பதாக கூறினீர். ஆனால், நான் தனிமையை உணரவில்லை. அப்படியே உணர்ந்தாலும் நீங்கள் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டபோதும் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டபோதும் நீங்கள் உணராத தனிமையையா நான் உணரப்போகிறேன். ’மதியாதார் வாசல் மிதியாதே’ என்பதை மறக்காமல் வாழ வேண்டும். ஆனால், நீங்களோ பா.ஜ.க உங்களிடம் ஆதரவு கேட்காமலே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கொடுத்தீர். அவர்கள் உங்களை அப்படியும் மதிக்கவில்லை என்ற பின்பு எதிர்த்தீர்கள். பா.ஜ.க உங்களைச் சேர்த்துக்கொண்டு உங்களுக்குச் சாதகமாக செயல்படவில்லை என்பதற்காக எதிர்க்கிறீர்கள். இதுவா தமிழரின் மரபு? இதுவா திராவிடத் தலைவரின் மரபு?  இளைஞர்களை ஏமாற்றலாம், ஆனால் பகுத்தறிவு உள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது.

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் வாக்காளர் பட்டியலில் அதிகம் இருக்கும் வரைதான் உங்கள் ஆட்டம். பகுத்தறிவு கொண்ட இளைஞர்கள் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் பெரும்பான்மை அடையட்டும். அந்த நாள் வரும்வரை சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் வேகத்தோடும் கொள்கையோடும் தொடர்ந்து அரசியல் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!