வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (16/08/2018)

கடைசி தொடர்பு:21:40 (16/08/2018)

ஜெயலலிதா மரண வழக்கு - எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆஜராகித் தங்களின் வாக்குமூலங்களை அளித்துவருகின்றனர். அனைவரின் வாக்குமூலங்களும் பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையும் இரண்டு சூட்கேஸ்கள்களில் ஆவணங்களைத் தாக்கல் செய்தது.

இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது டெல்லியிலிருந்து மூன்று எம்ய்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தனர். இதன் தொடர்பாக, தற்போது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவர் ஜி.சி.கில்னானி, அஞ்சண்டிரிகா மற்றும் நிதீஷ் நாயக் ஆகியோர் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான சுப்பையா விஸ்வநாதனுக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.