`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்!’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் | Srivaikundam farmers urges TN government to build check dam in Thamirabharani river

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (16/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (16/08/2018)

`நீர் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள்!’ கொதிக்கும் ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணியிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் 12,500 கன அடி தண்ணீரை, சடையநேரி கால்வாய் மூலம் சாத்தான்குளம் பகுதிக்கு திருப்பி விட வலியுறுத்தியும், பழையகாயல் பகுதியில் தடுப்பணை அமைத்து வீணாகும் தண்ணீரைச் சேகரிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அணை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு உட்பட 6 அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணையின் மேலக்காலில் இருந்து 1,500 கன அடியும், கீழக்காலில் இருந்து 400 கன அடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் இருந்து 1,100 கன அடியும், தென்காலில் இருந்து 1,190 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் செல்வதற்காக சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி வரும் நிலையில்,  ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 12,500 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

ஸ்ரீவைகுண்டம் அணை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ``தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைதான். இது ஆங்கிலேயர் காலத்திலேயே கட்டப்பட்ட பழைமையான அணை. பொதிகை மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை மாவட்டத்தைக் கடந்து தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஆழ்வார்திருநகரி, ஏரல் ஆகிய பகுதிகள் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளில் இருந்து 53 குளங்களுக்கு நீர் செல்கிறது. 

இவற்றின் மூலம் 46,107 ஏக்கர் நிலங்களில் நெல், வாழை ஆகிய பயிர்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், இதுபோன்ற வெள்ளப்பெருக்கு காலத்திலும், மழைக்காலத்திலும் தாமிரபரணியிலிருந்து 15 முதல் 25 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை, பழையகாயல் பகுதியில் இன்னொரு தடுப்பணை அமைத்து சேமிக்க வேண்டும். இந்தத் தடுப்பணை மூலம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் உள்ள குளங்களில் நீர் பெருகும். இதுகுறித்து அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் முறையிட்டோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை.

தற்போது கூட, தாமிரபரணியில் இருந்து கட்டுக்கடங்காமல் 12,500 கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும், சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீர் செல்லும் சடையநேரி கால்வாய்க்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திருப்பி விடவில்லை. வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மண் வெடித்து வறட்சியுடன் காணப்படும் குளங்களுக்கு திருப்பி விடாதது ஏன்? பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்” என்றனர் வேதனையுடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க