வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (16/08/2018)

கடைசி தொடர்பு:21:23 (16/08/2018)

தனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்னானது?

தனி ஆவர்த்தனம் செய்த ஆளுநர்... பூச்செடி நட்ட முதல்வர்... சுயாட்சி கொள்கை என்னானது?

மிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், இப்போது ஆளும் அ.தி.மு.க-வே அதிர்ச்சியில் உறைந்துபோகும் அளவுக்கு சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துள்ளார் ஆளுநர். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பொறுப்பேற்றார். அதையடுத்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அரசின் நலத்திட்டங்களை ஆய்வு செய்யக் கிளம்பினார் அவர். கடந்த ஆண்டு நவம்பரில் முதல்முறையாக கோவை சென்ற ஆளுநர், அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ஆளுநர் நடத்திய இந்த ஆய்வை மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு வரவேற்றது. ஆனால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

அரசின் நிர்வாகப் பணிகளில் தலையிடும் வகையில், ஆளுநர் மேற்கொண்ட இந்த ஆய்வு மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கியதுடன், ஆளுநர் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க. சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது. இதையடுத்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ``மக்களின் தேவைகள் மற்றம் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்கும், அதற்கேற்ப மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு கூடுதல் நிதி பெறுவதற்குமே ஆளுநர் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். அஸ்ஸாம் மாநில ஆளுநராக புரோஹித் இருந்தபோதும் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை அவர் நடத்தினார். அம்மாநில மக்கள் ஆளுநரின் ஆய்வை வரவேற்றனர். தமிழகத்தில் ஆளுநர் நடத்திய ஆய்வை, தமிழக அமைச்சர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக எந்தக் கூட்டத்தையும் ஆளுநர் கூட்டவில்லை. ஆளுநரின் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழகம் புகழின் உச்சத்தைத் தொட வேண்டும் என்பதே ஆளுநரின் விருப்பம்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கலை நிகழ்ச்சிகள் , பன்வாரிலால்

ஆளுநரின் ஆய்வு மற்றும் அதுதொடர்பான விளக்கம் பற்றி, கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ``ஆளுநர் பதவி என்பது ஒரு மாநிலத்தின் பெயரளவிலான தலைவர் பதவி. அவர், மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் கிடையாது. ஆனால், உண்மையான தலைவரான முதல்வர் (எடப்பாடி பழனிசாமி) மத்திய அரசுக்குப் பயந்து, இந்த ஆய்வைக் கண்டிக்காமலும், எதிர்ப்பு தெரிவிக்காமலும் பணிந்து செயல்படுகிறார். முதல்வர், தனது பதவிக்குரிய மரியாதையைக் காத்துக்கொள்ள வேண்டுமெனில் 'ஆளுநர் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது' என்று அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறி இருந்தார்.

ப.சிதம்பரம் மற்றும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ஆளுநரின் ஆய்வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தபோதிலும், ஆளுநர் தன்னுடைய பயணத்தை நிறுத்தவில்லை. இதையடுத்தே, ஆளுநர் ஆய்வுக்காகச் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்து, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்துவதற்காக ஆளுநர் பன்வாரிலால் சென்றபோது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டியதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் கார் மீது தி.மு.க-வினர் கறுப்புக் கொடியையும் தூக்கிவீசினர். அவர்களைப் போலீஸார் கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தி.மு.க.-வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தைத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் பின்னர், விடுதலை செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``ஆளுநர் தனது அதிகாரவரம்பை மீறி செயல்படுகிறார்'' என்று குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், ``மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆளுநரின் இந்த பயணத்தால் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். வரும் மாதங்களிலும் இதுபோன்ற சுற்றுப் பயணம் தொடரும். ஆளுநர் மாளிகை என்பது இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இந்தச் சட்டப்பிரிவின்படி, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரை பணி செய்ய விடாமல் அல்லது தடைகளை ஏற்படுத்துவது குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு 7 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கவும், அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுகுறித்தெல்லாம் நேரில் விளக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பது சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படும்'' என்று கூறப்பட்டிருந்தது.

ஆளுநர் ரோஸ் பூ நடுகிறார்

இப்படி, ஆளுநர் தன் அதிகாரத்திலும், ஆளுமையிலும் உறுதியாக இருக்கிறார். அதன்படி, தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று துறைவாரியான ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒருபடி மேலாகச் சென்று, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை பன்வாரிலால் புரோஹித் ஏற்றிவைத்து, புதிய வழக்கத்தைக் கொண்டுவந்துள்ளார். அதாவது, குடியரசு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் தேசியக்கொடியை ஆளுநர் ஏற்றி வைப்பது வழக்கம். அன்றைய தினம் மாலையில் ஆளுநர் மாளிகையில் முதல்வர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னையில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் போன்ற வி.ஐ.பி-க்களுக்கு தேநீர் விருந்தளிப்பது நடைமுறை. பெரும்பாலான வி.ஐ.பி-க்களும் ஆளுநர் அளிக்கும் இந்த விருந்தில் கலந்துகொள்வார்கள். 

அதுபோலவே, சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் (செயின்ட் ஜார்ஜ் கோட்டை- தலைமைச் செயலகத்தில்) இருக்கும் கொடி மரத்தில் முதல்வர் கொடி ஏற்றுவார். அன்று மாலையில், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட முக்கிய வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்வார்கள். ஆனால், சுதந்திர தினத்தன்று, ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெறுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தும் தனி ஆவர்த்தனம் நடத்தியுள்ளார் பன்வாரிலால். மாலையில் அவர் அளித்த வழக்கமான விருந்துக்கு முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களை அழைத்து  ரோஸ் செடிகளை நட்டார். இப்படி, ஆளுநர் பன்வாரிலால் செயல்பட்டிருப்பது  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர், இப்போது மேற்கொண்டுள்ள செயலுக்கு, மீண்டும் அரசியல் சட்டத்தை சுட்டிக்காட்டி, என்ன விளக்கம் சொல்லப்போகிறாரோ?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்