வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (16/08/2018)

கடைசி தொடர்பு:20:22 (16/08/2018)

`பழிவாங்கும் அரசுக்கு அடிபணியப்போவதில்லை’ - குமரியில் ஆவேசமான திருமுருகன் காந்தி

தூத்துக்குடியில் போராடியதற்காகத் தொடர்ந்து பழிவாங்கும் அரசுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இரணியல் நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருமுருகன் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒகி புயல் காரணமாகப் பலத்த சேதம் ஏற்பட்டது. ஒகி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கேட்டு குளச்சலில் மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கலந்துகொண்டார். அதுதொடர்பாகக் குளச்சல் போலீஸார் பதிவு செய்த வழக்கில் 24 வது பிரதியாகத் திருமுருகன் காந்தி சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் இன்று இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை, அங்கிருந்து போலீஸார் அழைத்து வந்து குளச்சல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஒகி புயல் பாதிக்கப்பட்டபோது நிவாரணம் கேட்டு ராமன்துறையில் மீனவர்கள் நடத்திய மறியலிலும் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். அதுதொடர்பாகப் புதுக்கடை போலீஸார் பதிவு செய்த வழக்கில் இன்று குழித்துறை நீதிமன்றத்திலும் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார். இரணியல் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தூத்துக்குடியில் போராடியதற்காக அரசு தொடர்ச்சியாகப் பழிவாங்கிக்கொண்டிருக்கிறது. அதற்காக நான் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை" என்றார்.