வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (16/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (16/08/2018)

கருணாநிதி நினைவுப் பேரணியைப் புறக்கணித்த ராமநாதபுரம் தி.மு.க முன்னாள் மா.செ! - உட்கட்சிப் பூசல் காரணமா?

 ராமநாதபுரத்தில் மாவட்ட தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி அஞ்சலி ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சரான சுப.தங்கவேலன் பங்கேற்கவில்லை. இது தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுப.தங்கவேலன் புறக்கணித்த கருணாநிதி நினைவு பேரணி.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்டத் தலைநகரங்கள், முக்கிய நகரங்களில் தி.மு.க சார்பில் நினைவுப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேரணிகளில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அ.தி.மு.க-வினரைத் தவிர அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் இன்று நினைவுப் பேரணி நடந்தது. அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய பேரணிக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், நகரச் செயலாளர் ஆர்.கே.கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ திசைவீரன், முன்னாள் நகர் செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் முரளீதரன், ஆத்ம.கார்த்திக், செல்லத்துரை அப்துல்லா, குட்லக் ராஜேந்திரன், கோபி (காங்கிரஸ்), சகுபர் சாதிக் (விடுதலைச் சிறுத்தைகள்), அரு.சுப்பிரமணியன் (ம.தி.மு.க), மக்கள் நீதி மய்ய நிர்வாகி நிவாஸ், சங்கர் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் திராளாக ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தி.மு.க-வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், அவரின் மகனும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சுப.த.சம்பத், சமீபத்தில் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுப.த.திவாகரன் மற்றும் தங்கவேலனின் ஆதரவாளர்களான ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர் தெற்கு, கமுதி மேற்கு ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிலர் இந்த அஞ்சலி பேரணியில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

மகனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது என்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளர் பதவி, மந்திரி பதவி மட்டுமல்லாது தன் மகன்களுக்கு இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்டச் செயலாளர் பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்த தன் கட்சித் தலைவரான கருணாநிதியின் அஞ்சலி பேரணியில் பங்கேற்காத சுப.தங்கவேலனின் செயல் மாவட்ட தி.மு.க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.