வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு! - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை | TN government announces public holiday over former president Vajpayee's demise

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (16/08/2018)

கடைசி தொடர்பு:20:39 (16/08/2018)

வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு! - தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிரிழந்ததையடுத்து, மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் மறைவு

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும் சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில், இருந்து வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி மாலை 5.05 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஒருவார காலம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறி மத்திய அரசு சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், `முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவையொட்டி, இன்று (16.08.2018) முதல் 7 நாட்கள் (22.08.2018) வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இந்த ஒருவார காலகட்டத்தில் எந்தவோர் அரசு நிகழ்ச்சிகளும் நடைபெறாது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ``முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவை அடுத்து நாளை (17.8.2018) அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது. அதேநேரம், அரசு கருவூலங்கள் நாளை செயல்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் சார்பில் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், புதுச்சேரி, பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.