இரண்டே நாள் மழையில் குட்டையாக மாறிய சென்னை சாலைகள்...!

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் தொடங்கி, மத்திய சென்னையின் அண்ணாசாலை, தென் சென்னையில் அடங்கிய மயிலாப்பூர் வரை, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் ஏற்பட்ட நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது. சென்னை அயனாவரம் பிரதான சாலையில் ஆங்காங்கே கடந்த சில தினங்களாக முளைத்துள்ள திடீர்க் குட்டைகளால், மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அந்தக் குட்டைகளில் தேங்கியுள்ள மழைத் தண்ணீரால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது

இரண்டே நாள் மழையில் குட்டையாக மாறிய சென்னை சாலைகள்...!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே, மாலை வேளையில் விட்டுவிட்டும் ஒருசில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த மிதமான மழைக்கே சென்னையின் முக்கியச் சாலைகளில் தண்ணீர் தேங்கிக் குட்டைகள்போல் அவை தோற்றமளிக்கின்றன. சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் தொடங்கி, மத்திய சென்னையின் அண்ணாசாலை, தென் சென்னையில் அடங்கிய மயிலாப்பூர் வரை, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் ஏற்பட்ட நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது. சென்னை அயனாவரம் பிரதான சாலையில் ஆங்காங்கே கடந்த சில தினங்களாக முளைத்துள்ள திடீர்க் குட்டைகளால், மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அந்தக் குட்டைகளில் தேங்கியுள்ள மழைத் தண்ணீரால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதுடன், அத்தகைய பள்ளங்களால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அயனாவரம் ஆண்டர்சன் சாலை அவலம்

சாலையில் தேங்கிக் காணப்படும் தண்ணீரை அகற்றுவதற்கு ஏதுவாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகளை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையுடன் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கந்தசாமி அந்த எண்ணைத் தொடர்புகொண்டு, சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதாகப் புகார் அளித்திருக்கிறார். "மிஸ்டர் கந்தசாமி, உங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம், உங்கள் புகார் மனு எண் : 371KNM ஆகும். வருங்காலங்களில், இதுதொடர்பான மேல் தகவலுக்கு இந்த எண்ணைக் குறிப்பிட்டுத் தகவல் அனுப்பும்படி கோருகிறோம்" என்று பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக் குரல் மூலம் பதில் கிடைத்திருக்கிறது. 

சமூக ஆர்வலர் கந்தசாமி, "அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் பொதுமக்களுக்கு ஆபத்து; உடனே சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ளவும்" என்று கடந்த 14.8.2018 அன்று புகார் செய்தார். என்றாலும், இரண்டு நாள்களாக சம்பந்தப்பட்ட பள்ளங்களை மூடும் வேலையைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பதாக இல்லை. அதுகுறித்து நம்மிடம் பேசிய கந்தசாமி, "அயனாவரம் ஆண்டர்சன் சாலை சந்திப்பு என்பது சென்னைக்குள் இருக்கும் எட்டுவழிச்சாலை போன்றதாகும். கொன்னூர், கொளத்தூர், ஐ.சி.எஃப்., கீழ்ப்பாக்கம் கார்டன் ஆகிய சாலைகளிலிருந்து இந்தச் சந்திப்பின் வழியாகவே வாகன ஓட்டிகள் வந்துபோகும் மிகவும் பிரதானப் பகுதி இது. கடந்த ஆண்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக இதே சாலையில்தான் இரண்டு மாணவர்கள், போலீஸ் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மழைநீர்க் குட்டைகளால் சாலை நெருக்கடி

எப்போதுமே நெரிசலுடன் காணப்படும் இந்தப் பகுதியில் உள்ள அணுகு சாலைகள் அனைத்தும் குறுகலானதாக இருந்ததால், அண்மையில் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அரசு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். என்றாலும் அந்தச் சாலை, முழுமையான அகலத்தில் இல்லை. இருக்கும் சாலையிலும் மழைநீர் தேங்கி, ஆங்காங்கே பள்ளங்களாகக் காணப்படுகிறது. இதனால், காலை, மாலை அலுவலக நேரங்களில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவுக்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. கடந்த சில நாள்களாகவே சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. பள்ளம் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்துவதற்காகத் தற்காலிகமாக, தடுப்புகளை வைத்துத் தீர்வு கண்டிருக்கிறார்கள். அந்தத் தடுப்புகளால் ஏற்கெனவே குறுகலாக இருக்கும் சாலை, மேலும் ஒடுங்கிக் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. அயனாவரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பேருந்து டெப்போ போன்ற மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளும் இந்தச் சாலை சந்திப்பில்தான் வருவதால், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புகார் குறித்து நினைவூட்டினால், 'நீங்கள் கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்' என்று ரிப்ளை வருகிறது. விரைந்து என்பது இரண்டு நாள்கள் கழித்தா அல்லது அதற்குப் பிறகா என்பதை அதிகாரிகள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!