வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (17/08/2018)

கடைசி தொடர்பு:00:30 (17/08/2018)

தூத்துக்குடி மாவட்டத்தின் 10வது தாலுகாவானது ஏரல்! - கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் மக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வது புதிய தாலுகாவாக ஏரல் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். ஏரலில் தற்காலிகத் தாலுகா அலுவலத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டியை அடுத்து 3-வது பெரிய வணிக நகரமாக விளங்கி வருகிறது ஏரல் பேரூராட்சி. இங்கு, சில்வர் பாத்திரங்கள், பித்தளைப் பொருள்கள், ஜவுளிகள், தங்கநகைகள், வெள்ளிப் பொருள்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வியாபாரத்துக்காக ஏரலைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி ஏரலுக்கு வந்து செல்கின்றனர். இந்தப் பெரிய நகரைச் சுற்றி உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாலுகா அலுவலகத்துக்காக, 20 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்துாருக்கும் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், அப்பகுதி மக்கள், பல்வேறு சிக்களுக்கு உள்ளாவதுடன், ஒருநாள் முழுவதும் செலவிடும் நிலை இருந்தது. மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் ஏரல் சுற்றுவட்டாரப்பகுதி, ஏரலை தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகாவாக அரசு அறிவிக்க வேண்டும் என இப்பகுதி வியாபாரிகள், அனைத்துக் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், தூத்துக்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தின் 10-வது தாலுகாவாக, ஏரலை தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகா அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் ஏரலை தனித் தாலுகாவாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏரல் தாலுகாவாக அறிவிக்கும் விழா கடந்த 1-ம் தேதி நடப்பதாக திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அன்று, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவால், அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்பையொட்டி 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், அரசு அறிவித்த துக்கம் முடிவடைந்த நிலையில், இன்று துாத்துக்குடி மாவட்டத்தின் 10-வது புதிய தாலுகாவாக ஏரல் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயககத்தில் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி  மூலம் இதைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஏரல் தற்காலிகத் தாலுகா அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். 

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்த ஆறுமுகமங்கலம் குறுவட்டத்தில் உள்ள 17 வருவாய் கிராமங்கள், பெருங்குளம் குறுவட்டத்தில் உள்ள 11 வருவாய் கிராமங்கள் மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் இருந்த  ஆழ்வார்திருநகரி குறுவட்டத்தில் 17 வருவாய் கிராமங்கள் என மூன்று குறுவட்டத்தில் உள்ள  45  வருவாய் கிராமங்கள் உள்ளடக்கி ஏரல் தனித் தாலுகாவாக உருவாக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க