வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (17/08/2018)

கடைசி தொடர்பு:01:30 (17/08/2018)

கரூரில் வெள்ள நீரால் சூழப்பட்ட நீருந்து நிலையம் - சீராக குடிநீர் வழங்க ஆட்சியர் நடவடிக்கை

"காவிரி வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு லாரிகள்  மூலமும்,இன்னபிற வசதிகள் மூலம் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 காவிரி


கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குட்பட்ட கட்டளை பகுதியில் அதிக அளவிலான காவிரி நீர் செல்வதால் ஆற்றங்கரை அருகில் உள்ள நீருந்து நிலையமும், மின்மாற்றியும் முழுவதுமாக நீரால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியினை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணி பகுதி 37வது வார்டு முதல் 48வது வார்டு வரையிலான மக்களுக்கு, கட்டளை பகுதியில் உள்ள நீருந்து நிலையத்தில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இந்த நீருந்து நிலையம் முழுக்க வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால்,மின்சாரம் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,இங்கு மின்வியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கரூர் நகராட்சிக்குட்பட்ட 10 வார்டுகளில் வசிக்கும் 16,154 குடியிருப்புகளில் உள்ள சுமார் 47,983 பேருக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. இந்த அசாதாரண சூழலை பொதுமக்கள் பொறுத்தருள வேண்டும். அதுமட்டுமல்லாது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லா வகையில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு மேற்சொன்ன பகுதி மக்களில் 40,43 மற்றும் 45 வார்டு பகுதி மக்களுக்கு நெரூரில் உள்ள நீருந்து நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலமாகவும், மீதமுள்ள 7 வார்டுகளுக்கு கரூரில் இருந்து லாரிகள் மூலமாகவும் தொடர்ந்து சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், கூடுதல் லாரிகள் மூலமாகவும் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து சீரானவுடன் கட்டளையில் உள்ள மோட்டார்கள் பழுதுநீக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீரானது விநியோகம் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.