சுவர் ஓவியமான சங்க இலக்கியங்கள்: ஆசிரியரின் புது முயற்சி!

ஆண்ட்ராய்டு மொபைலில் மீம்ஸ்,ஸ்டேட்டஸ் பார்ப்பதே இன்றைய மாணவர்களின் அதிகபட்ச அறிவுத்தேடலாக மாறிவிட்டது. இந்நிலையில், தனது பள்ளி மாணவர்கள் சங்க இலக்கியங்கள், ஐந்து திணைகள், தமிழ்நாட்டுச் சின்னங்கள், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள ஏதுவாக, பள்ளிச் சுவர் முழுக்க அவற்றை ஓவியமாக்கி அசத்தியிருக்கிறார், அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பூபதி. 

 சங்க இலக்கியங்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார் பூபதி. பல்வேறு ஸ்பான்ஸர்களைப் பிடித்து, பள்ளி முழுக்க இயற்கைக் காய்கறித் தோட்டங்கள், நவீன தரைத்தளம், நவீன டாய்லெட் வசதி, பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி, ஏ.சி-யுடன்கூடிய கணினி ஆய்வகம், தொடுதிரை வகுப்பறை என்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார். இதைத்தவிர, மாணவர்களுக்கு யோகா, கராத்தே வகுப்புகளையும் நடத்திவருகிறார். இதற்காக, இந்தப் பள்ளி சமீபத்தில் ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழைப் பெற்றது. சமீபத்தில், அரசால் வழங்கப்பட்ட மாவட்ட அளவிலான கனவு ஆசிரியர் விருதையும் ஆசிரியர் பூபதி பெற்றார்.

இந்தச் சூழலில்தான், தனது பள்ளி மாணவர்களுக்கு சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டுச் சின்னங்கள், ஐந்திணைகள், தமிழ்த்தாய் வாழ்த்து, காடுகள், தூய்மை இந்தியா பற்றி எனப் பல விசயங்களைத் தெரிந்துகொள்வதற்கு வசதியாக அனைத்து கட்டட, காம்பவுண்டு சுவர்களிலும் கண்ணைக் கவரும் வகையில் வண்ண ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார். சும்மா இருக்கும் நேரத்தில், எல்லா  மாணவ மாணவியரும் இந்த ஓவியத்தைப் பார்த்து, பல விசயங்களைத் தெரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
 

இதுபற்றி, ஆசிரியர் பூபதியிடம் பேசினோம். "இப்போதைய தலைமுறை ஆண்ட்ராய்டு மொபைல் யுகத்தில் உள்ளது. உலக அளவில் உள்ள மக்கள் சைகையையே பாஷையாக்கி பேசிக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் தமிழ்மொழி பேசிகொண்டிருந்தார்கள். அந்த மொழியில் உலகமே வியக்கும் அளவுக்கு பல புலவர்கள் சங்க இலக்கியங்களைப் படைத்துவைத்தார்கள். இன்னும் பல சிறப்புகளைச் செய்தார்கள். பல மாணவர்களுக்கு இன்னும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடத் தெரியவில்லை. அதை எழுதியது யார் என்று கூறத் தெரியவில்லை. அதனால்தான், மாணவர்களின் கண்களில் எந்நேரமும் இந்த விசயங்கள் படும் வகையில், இப்படி அழகிய ஓவியமாக பள்ளிக் கட்டடச் சுவர்களில் தீட்டியிருக்கிறேன். இப்போது, மாணவர்கள் சுவர் ஓரமாகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிற்கிறார்கள்" என்றார் பெருமிதமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!