கரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே? -பெ.மணியரசன் வேதனை

காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் வராத அவலம் நீடிக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

பெ. மணியரசன்

காவிரி உரிமை மீட்புக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டார்கள். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்த பெ.மணியரசன், ‘’திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆனால், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை. இதனால், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். வடுவூர், கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை. தமிழக அரசின் பொதுப்பணித்துறையே இதற்குக் காரணம்.

இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். நடப்பு சாகுபடிக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் இங்குள்ள வாய்க்கால்கள் அனைத்தையும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு தூர் வாரி செப்பனிட வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் காவிரி டெல்டா நீர் மேலாண்மைக்கு மாபெரும் மறு சீரமைப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார். காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இவர் முன்வைத்துள்ள இந்த யோசனை, விவசாயிகள் மத்தியிலும் நீர் மேலாண்மை நிபுணர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!