ஃபேஸ்புக்கில் காதல்... லட்சத்தை இழந்த அந்தமான் இளம்பெண் - வேலையில்லா பட்டதாரியின் வாக்குமூலம்

இளம்பெண் செல்வியை ஏமாற்றிய சசிகாந்த் சிவாஜி


அந்தமானைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி ஏமாற்றிய புனேயைச் சேர்ந்த திருமணமானவரை போலீஸார் பிடித்துள்ளனர். 

அந்தமானைச் சேர்ந்த இளம்பெண் செல்வி (மாற்றம்), சென்னையில் படித்தார். பிறகு சென்னை நந்தம்பாக்கத்தில் தங்கியிருந்தார். சொந்தமாகத் தொழில் தொடங்க அவர் இணையதளத்தில் வாய்ப்புகளைத் தேடினார். அப்போதுதான், ஃபேஸ்புக் மூலம் புனேயைச் சேர்ந்த சசிகாந்த் சிவாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிசினஸ் தொடர்பாக இருவரும் ஆலோசித்துள்ளனர். இந்த நிலையில், செல்வியை நேரில் சந்திக்க சசிகாந்த் சிவாஜி கோவா வந்தார். சென்னையிலிருந்து செல்வியும் அங்கு சென்றார். ஹோட்டலில் இருவரும் சந்தித்தனர். அதன்பிறகு இருவரும்  அடிக்கடி சந்தித்து பிசினஸ் ரீதியாகப் பேசிவந்தனர். இரண்டரை ஆண்டுகள் இந்தப் பழக்கம் தொடர்ந்துள்ளது. சசிகாந்த் சிவாஜியை செல்வி முழுமையாக நம்பியுள்ளார். இதனால், சசிகாந்த் சிவாஜி கேட்கும்போதெல்லாம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்துள்ளார். 

சில மாதங்களாக, சசிகாந்த் சிவாஜியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதனால், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சசிகாந்த் சிவாஜியிடம் செல்வி வலியுறுத்தியுள்ளார். அதன்பிறகு, செல்வியை சந்திப்பதை சிவாஜி தவிர்த்துள்ளார். இதனால், செல்வி புனேவுக்குச்  சென்று, சிவாஜியின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்தார். அங்கு, அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. சிவாஜிக்கு திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர். இந்தத் தகவல் தெரிந்ததும் சிவாஜியுடன் தகராறு செய்தார். அதோடு, கொடுத்த பணத்தையும் திரும்பக் கேட்டார். ஆனால், பணத்தைக் கொடுக்காமல் செல்வியை மிரட்டினார். அதன்பிறகே சிவாஜியின் சுயரூபம் தெரிந்த செல்வி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பிறகு, நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவத்தை விவரமாகக் கூறி புகார் கொடுத்தார். போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிவாஜியை போலீஸார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்தனர். ஆனால், அவர் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்தார். இதனால் தனிப்படை போலீஸார் சில நாளுக்கு முன்பு புனே சென்று சிவாஜியை மடக்கிப்பிடித்தது. பிறகு விசாரணைக்காக சென்னை அழைத்துவந்தனர். 

போலீஸார் சிவாஜியிடம் நடத்திய விசாரணையில், `செல்வியை  ஏமாற்றியது உண்மைதான். ஆனால் எனக்கே வேலையில்லை. எனவே பணத்தை திரும்பக் கொடுக்க முடியாது. எனக்கு குடும்பம் இருப்பதால் அவரை திருமணமும் செய்ய முடியாது' என்று வாக்குமூலம் அளித்தார். அதன்அடிப்படையில் சிவாஜியை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அந்தமானைச் சேர்ந்த செல்வியும் புனேவைச் சேர்ந்த சசிகாந்த் சிவாஜியும் ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்துள்ளனர். கோவாவில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, திருமண செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, செல்வியிடம் எல்லை மீறி நடந்துள்ளார் சசிகாந்த் சிவாஜி. இதற்கிடையில்,  செல்வி கொடுத்த பணத்தையும் அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். செல்வி கொடுத்த புகாரின்பேரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிகாந்த் சிவாஜியைக் கைதுசெய்துள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``புனேயைச் சேர்ந்த சசிகாந்த் சிவாஜியின் ஃபேஸ்புக்கை ஆய்வுசெய்தோம். அதில், அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் பல பெண்கள் உள்ளனர். மேலும், சசிகாந்த் சிவாஜி, யாரையும் எளிதில் மூளைச்சலவை செய்துவிடுவார். அவரின் பேச்சில், நடை உடையில்தான் செல்வியும் ஏமாந்துள்ளார். ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகிய சசிகாந்த் சிவாஜியை நம்பிய செல்வி கூறும் தகவல்களை வெளியில் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு சசிகாந்த் சிவாஜி செல்வியை ஏமாற்றியிருக்கிறார். செல்வி கூறிய குற்றச்சாட்டுகளை முதலில் மறுத்த சசிகாந்த் சிவாஜி, பிறகு அதை ஒத்துக்கொண்டார்'' என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!