வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (17/08/2018)

கடைசி தொடர்பு:13:01 (17/08/2018)

1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி!

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது மெத்தனமாகச் செயல்பட்ட சுமார் 1000 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில்10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மறுகூட்டலுக்கு மட்டும் இருபதாயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அப்போது, சில மாணவர்களின் விடைத்தாள்களில் அதிக மாறுபாடு இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேர்வாணையம், முன்னதாக அந்தத் தாள்களைத் திருத்திய ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டது. 

அந்த விசாரணையில், 500 பட்டதாரி ஆசிரியர்கள், 500 முதுநிலை ஆசிரியர்கள் என 1000 பேர் விடைத்தாள்களைத் திருத்தும்போது மெத்தனமாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், சில கேள்விகளுக்கு அதற்கான மதிப்பெண்கள் வழங்காமல் விட்டதும், சில தாள்களில் கூட்டல் மற்றும் மதிப்பீட்டில் பிழைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வுமைய அதிகாரி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மெத்தனமாகச் செயல்பட்டதுக்கு விளக்கம் கேட்டு 1000 ஆசியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸுக்கு உரிய விளக்கமளிக்காதவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.