`டாக்டர் வராததால் கெஞ்சினோம்; நர்ஸ் விடவில்லை'- பிரசவத்தில் குழந்தை இறந்ததால் உறவினர்கள் ஆவேசம்!

தஞ்சாவூர் அருகே உள்ள வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கனிமொழி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு பல மணி நேரமாகியும் டாக்டர் வராததால், பணியில் இருந்த செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். அதனால் குழந்தை இறந்தே பிறக்க, கனிமொழியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததோடு, `இதற்குக் காரணமான டாக்டர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்தால்தான் குழந்தையின் சடலத்தை வாங்குவோம்; நாங்களும் இங்கிருந்து செல்வோம்' எனப் போராட்டம் நடத்திவருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் செயல்பட்டுவருகிறது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு, நேற்று மாலை கனிமொழி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருக்கவேண்டிய மருத்துவர் சிவாகம சுந்தரி பணியில் இல்லை. இரண்டு பெண் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள், டாக்டர் வந்து விடுவார், வந்ததும் சிகிச்சையைத் தொடங்கி விடலாம் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இரவு 12 மணி வரை டாக்டர் வரவே இல்லை. இந்த நிலையில், கனிமொழிக்கு வலி அதிகமாகவே, செவிலியர்களே பிரசவம் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதில், கனிமொழிக்கு குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது. இதனால் அவரது கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதற்குக் காரணமான டாக்டர் மீது வழக்குப்பதிய வேண்டும் என குழந்தையின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுகுறித்து கனிமொழியின் உறவினர்களிடம் பேசினோம். ``பிரசவ வலி ஏற்பட்டு நேற்று மாலை ஆறு மணிக்கு சேர்த்தோம். ஆனால் நர்ஸ், டாக்டர் வந்துவிடுவார் என சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், நேரம் போனதே தவிர டாக்டர் வரவில்லை. டாக்டர் வரவில்லை என்றால், 108 ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுங்கள் என அழாத குறையாகக் கெஞ்சினோம். ''டாக்டர் தான் வர்றேன்னு சொல்லிட்டாங்கள்ள, அப்புறம் ஏன்? இங்கேயே இருக்கட்டும்'' என்று கூறிவிட்டார். இந்த நிலையில், இரவு 12 மணியளவில் வலி அதிகமாகவே, நர்ஸ்களே பிரசவம் பார்க்கத் தொடங்கினர். இதில் குழந்தை இறந்தே பிறந்தது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட டாக்டர் சிவகாம சுந்தரி, வண்டியில் வரும்போது விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி பொய்சொல்லி தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறார்.

வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

இதில் அதிர்ச்சியடைந்த நாங்கள், இதற்குக் காரணமான டாக்டர் மீது வழக்கு போட்டால்தான் குழந்தையின் சடலத்தை வாங்குவோம் எனப் கூறியதோடு சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். ஆனால், காவல்துறையினர் டாக்டருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கக் கூடாது என்கிறது அரசு. அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு டாக்டர் இல்லாத காரணத்தால் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதற்குக் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பும்  இதே போன்ற சம்பவம் இங்கு நடந்தது. சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையே கொடுக்கப்படாமல் இறப்பு ஏற்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய கொடுமை. இப்படிப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எங்க பகுதிக்கு வேண்டாம். இழுத்து மூடிவிடுங்கள். அந்த மருத்துவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தையின் சடலத்தை வாங்க மாட்டோம். நாங்களும் இங்கிருந்து போக மாட்டோம்'' என்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!