மாநில பல்கலைக்கழகங்களை சீராக்கிவிட்டு, தனியாருக்கு அனுமதி அளிக்கலாமே! | Voices against the establishment of Private Universities in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (17/08/2018)

கடைசி தொடர்பு:16:11 (17/08/2018)

மாநில பல்கலைக்கழகங்களை சீராக்கிவிட்டு, தனியாருக்கு அனுமதி அளிக்கலாமே!

``அப்பா வேந்தர், மகன் துணைவேந்தர், மருமகன் இணைவேந்தர் எனக் குடும்பத்தில் உள்ளவர்களை மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் தில்லுமுல்லுகள் நடப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்!”

மாநில பல்கலைக்கழகங்களை சீராக்கிவிட்டு, தனியாருக்கு அனுமதி அளிக்கலாமே!

ந்திய அளவில் சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்று பெயர்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தலைகுனிந்து நிற்கிறது. மாணவர் சேர்க்கையிலிருந்து மறுமதிப்பீடு  வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கு எதிராகப் புகார் கிளம்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், `தமிழ்நாட்டில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியமா?‛ என்று கேள்வி எழுப்புகின்றனர் கல்வியாளர்கள்.

 

மாநில பல்கலைக்கழகங்கள்

தமிழக அரசு கடந்த மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதியளித்து சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இந்தத் தனியார் பல்கலைக்கழகங்கள், தங்களது கல்லூரிகளையும், கூடுதல் வளாகங்களையும்  தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசினோம். 

`அரசு பல்கலைக்கழகங்களிலேயே இவ்வளவு கேலிக்கூத்து நடக்கும்போது, தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியமா?” என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த கல்வியாளரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் அனந்தகிருஷ்ணன். 

பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழகம்``தமிழ்நாட்டில் உயர்கல்வி என்பது அழிவு நிலையில்தான் இருக்கிறது. இந்த நிலையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. தற்போது அரசு அனுமதி வழங்கியிருப்பது வேண்டுமானால் நல்ல நிறுவனங்களாகவே இருக்கலாம். ஆனால், இதையே முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு ஏராளமானோர் தனியார் பல்கலைக்கழகம் தொடங்குகிறோம் எனக் களம் இறங்குவார்கள். இதனால், கல்வித்துறையில் ஊழல் அதிகரிக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். 

ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் செயல்படும் தனியார் பல்கலைக்கழகங்களின் செயல்பாடு மிகவும் மோசம். ஒரு தனியார் பல்கலைக்கழகம், ஒரே வருடத்தில் 20,000 பேருக்கு முனைவர் பட்டம் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் கொஞ்சம் மிச்சம் மீதியுள்ள கல்வியின் தரமும் தனியார் பல்கலைக்கழகங்களால் தரைமட்டமாகி வருகின்றன. 

தனியார் பல்கலைக்கழகத்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது நொண்டிச் சாக்கு. ஏற்கெனவே, அரசு பல்கலைக்கழகங்களில் படித்து முடித்தவர்களுக்கே சரியான வேலைவாய்ப்பு இல்லை. இதனை எல்லாம் அரசு  கவனித்து முடிவெடுக்க வேண்டும்.

தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியபோது, ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை பெரிதாக எந்த ஆராய்ச்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 18 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. எந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சியில் சிறப்பாகச் செயல்படவில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், பணம் பார்க்கும் குடும்பத் தொழிலாகத்தான் மாறியிருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கும் முன் `கல்வியின் வழியே சேவை செய்கிறோம்’ என்று சொல்லலாம். ஆனால், ஆரம்பித்தபின் வர்த்தக நிறுவனங்களாக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்” என்றார் அனந்தகிருஷ்ணன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ``தனியார் பல்கலைக்கழகங்களை நடத்தும் தனியார் நிறுவனங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். பிசினஸுக்கு என்று இல்லாமல் கல்விக்கான பொதுச்சேவையாக இருக்க வேண்டும். இதுமட்டும் மிக முக்கியமானது. தற்போது தன்னாட்சி உரிமை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களே தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றுதான் செயல்பட்டு வருகின்றன. 

பாலகுருசாமி அண்ணா பல்கலைக்கழகம்தனியார் கல்வி நிறுவனங்கள் என்றாலேயே குடும்ப உறுப்பினர்களை மட்டுமே வைத்து நிர்வாகக் குழுவை அமைத்துக்கொள்கிறார்கள். அப்பா வேந்தர், மகன் துணைவேந்தர், மருமகன் இணைவேந்தர் எனக் குடும்பத்தில் உள்ளவர்களை மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை எடுத்துக்கொண்டால் தில்லுமுல்லுகள் நடப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். இதைச் சரிசெய்ய வேண்டும். 

தனியார் பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் குழுக்களில் அரசு தரப்பு அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்துறையினர் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டியது அவசியம். நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பாராளுமன்றச் சட்டப்படியோ அல்லது சட்டமன்றச் சட்டப்படியோ உருவாக்கியது அல்ல. இதனால் அது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தாறுமாறாய்ச் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டமன்ற மசோதா மூலம் உருவாக்கப்படுவதால், தவறு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது” என்றார் பால குருசாமி. 

மேலும், ``இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை மேலும் மேம்படுத்த நிறையக் கல்வி நிறுவனங்கள் தேவை. அதைத் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதில் தவறு இல்லை. பொது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார். 

ஆரம்பத்தில் சேவை என்பார்கள். ஆனால், காலத்தின் கட்டாயத்தில் சேவையே வியாபாரமாக மாறிவிடும் என்பதற்கு உதாரணங்கள் சொல்லவா வேண்டும்!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close