`சுதந்திரம்' நல்லா இருக்கான்... மருத்துவமனைக்குச் சென்ற துணை நடிகை -  இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்

 துணை நடிகை கீதா

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கால்வாயிலிருந்து பச்சிளம் குழந்தை சுதந்திரத்தை மீட்டெடுத்த துணை நடிகை கீதா, நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரைக் கொஞ்சியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகாலில், பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. அந்தக் குழந்தையை துணை நடிகை கீதா என்பவர் மீட்டெடுத்தார். சுதந்திர தினத்தில் ஆண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டதால், `சுதந்திரம்' என்ற பெயரை கீதா சூட்டினார். பிறகு, அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, முதலுதவியும் அளித்தார். தற்போது `சுதந்திரம்' சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். 

 கீதாவின் செயலைப் பாராட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் கிப்ட் ஒன்றை வழங்கினார். இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கீதா. அவரும் அவரின் போனும் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கீதாவிடம் பேசினோம். 

 ``சுதந்திரத்தை மீட்டு உயிரோடு காப்பாற்றியதற்காக என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். உண்மையில் நானும் சுதந்திரத்தைப் போல ஒரு அநாதைதான். சின்ன வயதில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அப்பாவின் கவனிப்பில்தான் வளர்க்கப்பட்டேன். ஆலந்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதி என்னை தத்தெடுத்து வளர்த்தனர். எனக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இதனால் பெற்றோர் இல்லாமல் வாழ்வது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. சுதந்திரத்தின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். ஒருவேளை சுதந்திரத்தின் பெற்றோர் குறித்த தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவனை தத்தெடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். சுதந்திரத்தை இந்தக் கையால்தான் மீட்டெடுத்தேன்.

கால்வாய்க் குழாயிலிருந்து அவனை மீட்டு குளிப்பாட்டியபோது எனக்குள் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. என்னை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், கிப்ட் கொடுத்து கௌரவித்துள்ளார். அந்த நிகழ்வை மறக்க முடியாது. சுதந்திரத்தின் நினைவுகளால் என்னால் சரிவர தூங்க முடியவில்லை. இதனால்தான் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவனைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறான். அவனின் கழுத்தில் நகக்கீறல்கள் உள்ளன. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அரசு பராமரிப்பில் `சுதந்திரம்' இருப்பதால், நிச்சயம் அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதற்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்றார். 

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!