`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம் | Youth arrested for dispute with traffic police

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (17/08/2018)

கடைசி தொடர்பு:16:15 (17/08/2018)

`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்திவிட்டு போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்த அண்ணன், தம்பியைப் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸிடம் தகராறு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்துவருபவர் ஐயப்பன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து டூவீலரில் வெளியே வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கரியமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பால் அரசு ஊழியர் ஐயப்பன் மீது மோதியிருக்கிறார். விபத்தைத் தொடர்ந்து ஜான்பால் மற்றும் ஐயப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜான்பால் ஆவேசமாகி ஐயப்பனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இவர்களது மோதலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக சிக்னலில் போக்குவரத்தைச் சீர் செய்துகொண்டிருந்த போக்குவரத்து காவலர் தகராறில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஜான்பாலைக் காவலர் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது.

போலீஸிடம் தகராறு

இதையடுத்து ஜான்பால் மற்றும் அவரின் சகோதரர் சொர்ண பால் ஆகியோர் போக்குவரத்து காவலரிடம் பிரச்னை செய்தனர். அப்போது போக்குவரத்து காவலரிடம், ``டாக்டர் படிக்கும் என் சகோதரனை அடிப்பியா. இப்ப என்னை அடிச்சுப்பாரு" என எகிறினார். போலீஸ் சமாதானம் செய்தும் அமைதியடையாத ஜான்பால் மற்றும் சொர்ணபால் ஆகியோரை நேசமணிநகர் போலீஸார் கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்த சகோதரர்களைக் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 10 நாள்களுக்கு முன்னர், இதே பகுதியில் துணிக்கடை அதிபரின் மகன் போக்குவரத்து காவலரிடம் ரகளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.