`மீனவர்களைக் கண்டுபிடிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம்!' - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

`மீன்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணாமல்போன மீனவர்களையும் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்' என அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர் மீனவர்கள். 

மீனவர்கள் அமைப்பு

நாகர்கோவிலில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மீண்டெழும் குமரி அமைப்பு நிர்வாகிகளான ஜெகத்கஸ்பர் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோர், மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர். இந்தச் சந்திப்பில் அவர்கள் பேசியதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒகி புயல் சமயத்தில் நடந்துகொண்டதைப் போன்று ஏனோதானோ என்று நிவாரணம் வழங்கக் கூடாது. கேரளத்தில் கப்பல் விபத்தில் இறந்த மீனவர்களின் உடல்கள் பல நாள்களுக்குப் பிறகு, மீட்கப்பட்டுள்ளது. மீன்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 

அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கவும் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் மீனவர்களுக்கு அரசு கைப்பேசி வழங்குவது போன்று நம் நாட்டு மீனவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் கேரளாவில் பணி செய்துவருகிறார்கள். கேரளத்தில் மழை பாதித்ததால் குமரி மாவட்டத் தொழிலாளர்கள் ஒரு மாதத்துக்குமேல் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். குமரி மாவட்டத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் குளங்கள் தூர்வாரும் பணியை மக்களிடம் அறிவித்து செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றுச்சூழல் மென்மையான மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்வது புதிது அல்ல. ஆனால், மழையால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடு இல்லாததுதான் காரணம். அணை திறப்பதற்கு முன் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை. ஆனாலும் பாதிப்பு ஏற்பட்டதும் ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டது பாராட்டுக்குரியது. மழைநீர் செல்லமுடியாத காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் 70 கி.மீ நான்கு வழிச்சாலையை உடனடியாக அகற்ற வேண்டும்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!