வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (17/08/2018)

கடைசி தொடர்பு:17:15 (17/08/2018)

`பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது!' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை

`நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்கின்ற தமிழக அரசின் கோரிக்கையை  உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைக் கடந்த மே 28-ம் தேதி நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்தது தமிழக அரசு. இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு, ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா குழுமம். 

அந்த மனுவில், ``ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதில் உள்நோக்கம் உள்ளது. ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், 'வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல; மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது தமிழக அரசு.

ஆனால், தமிழக அரசின் வாதத்தைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆலையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு மீதான விசாரணை, கடந்த வாரம் வியாழனன்று பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது ஆலை தரப்பில் பேசியவர்கள், "ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே, அவற்றைக் கையாளும் பொருட்டு குறைந்த பட்சமாக 30 நாள்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவுப் பிறப்பித்த நீதிபதி கோயல், ``நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம். ஆனால், அதே சமயம் கண்டிப்பாக எந்தவிதமான உற்பத்திப் பணிகளும் நடைபெறக் கூடாது" எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம்' என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

அத்துடன், 'ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசுப் பிறப்பித்த அரசாணைக்கு எதிரான விசாரணையைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்து நடத்தலாம். அங்கு தமிழக அரசின் சார்பில் வாதங்களை மீண்டும் எடுத்து வைக்கலாம்' என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க