பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய கேரளா சென்றுள்ள தமிழக மருத்துவக் குழுக்கள்!

கேரள வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மருத்துவக் குழுக்கள் கேரளா விரைந்துள்ளனர். முன்னதாக, சில மருத்துவக்குழுக்கள் கேரளா சென்று அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களுடன் இணைந்தும் மருத்துவ உதவி செய்துவருகின்றனர்.

இதுதொடர்பாகத் தேனி மாவட்டப் பொது சுகாதாரம் இணை இயக்குநர் வரதராஜனிடம் பேசினோம். ``தேனி மாவட்டத்திலிருந்து நேற்று காலை நான்கு மருத்துவக் குழுக்கள் கேரளா சென்றுள்ளன. ஒரு குழுவில் மருத்துவர், செவிலியர் உட்பட ஐந்து பேர் இருப்பர். மேலும் மூன்று குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வரும் மருத்துவக் குழுக்களுடன் இணைந்து செல்வர்.

முன்னதாகச் சென்ற மருத்துவக்குழு, கம்பம் மெட்டு வழியாகக் கட்டப்பனை சென்று, அங்குள்ள கேரள மருத்துவக் குழுக்களின் வழிகாட்டுதலில் மற்ற இடங்களுக்குச் சென்று மருத்துவ உதவிகளை செய்துவருகிறார்கள். அவர்கள் செல்லும்போதே தேவையான மருந்துகளைக் கொண்டு சென்றுள்ளனர். கூடுதலாக மருந்துகள் தேவைப்பட்டால்,. பின்னர் அனுப்பப்படும்’’ என்றார். இந்நிலையில், இன்று காலை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று வாகனங்களில் அரிசி, காய்கறி, பருப்பு, பால்பவுடர், துணி வகைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள்கள் கம்பம்மெட்டு வழியாகக் கட்டப்பனைக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது. அங்கிருந்த நிவாரண முகாம்களுக்குப் பொருள்கள் பிரிந்து அனுப்பப்படும்" என்கின்றனர் அதிகாரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!