வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (17/08/2018)

கடைசி தொடர்பு:16:07 (17/08/2018)

`சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!' - கேரள மக்களுக்குக் கரம் நீட்டிய ரயில்வே

கேரளாவிலிருந்து சென்னைக்கு வருவதற்கு ஏதுவாக இன்று சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளன. வரலாற்றில் இல்லாத அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 167 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பெரும்பாலானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் வீடுகளை விட்டு வெளியேற முடியாததால், அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவரகள் பலரும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், கேரள மக்கள் பயன்பெரும் வகையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (17.08.2018) கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்வண்டியானது, ஆலப்புழா வழியாகக் கொல்லம், திருவனந்தபுரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாகச் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தை வந்தடைய உள்ளது. மாலை 6 மணி அளவில் கேரளத்திலிருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயிலை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.