`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்’ - 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கி டாக்கிக் கொள்ளையன் தினகரன்  | Chennai police arrests famous thief dinakaran: 3kgs of gold recovered from him

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (17/08/2018)

கடைசி தொடர்பு:19:02 (17/08/2018)

`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்’ - 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கி டாக்கிக் கொள்ளையன் தினகரன் 

கொள்ளையன் தினகரன் மற்றும் அவரின் கூட்டாளிகள்

 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட பிரபல வாக்கிடாக்கி கொள்ளையன் தினகரனை சென்னை போலீஸார் முதல் முறையாகப் பிடித்துள்ளனர். அவரிடமிருந்து 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, 1000 அமெரிக்க டாலர், 2 வாக்கி டாக்கிகள், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கொள்ளையர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அதில் தினகரன் புதுவிதம் என்கின்றனர் சென்னை போலீஸார். தினகரன் பெயரைக் கேட்டாலே தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என 4 மாநிலங்களின் போலீஸாருக்குத் தலைவலி ஏற்படும். கடப்பாரை, கயிறுதான் தினகரனின் மூலதனம். கடப்பாரையைக் கொண்டு பூட்டிய வீடுகளையும் கடைகளையும் உடைத்துக் கொள்ளையடிப்பதில் தினகரனுக்கு நிகர் தினகரன்தான். மேலும், எத்தனை மாடிக் கட்டடம் என்றாலும் கயிறு மூலம் ஏறிக் கொள்ளையடித்துவிடுவார். நான்கு மாநிலங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கைவரிசையைக் காட்டிய தினகரனைப் பிடிக்க சென்னை போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாருக்கும் தினகரன் சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தார். பல இடங்களில் அவரைப் பிடிக்க பொறி வைத்தாலும் அதை மோப்பம் பிடித்துவிட்டு தப்பிவந்தார். 

இந்தநிலையில், தினகரனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அதில் அவர் சிக்கிக்கொண்டார். தமிழக போலீஸாரிடம் முதல் முறையாகத் தினகரன் சிக்கியிருக்கிறார். அவரிடம் விசாரித்தபோது, தினகரனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், நரையூர் கிராமம் என்று தெரிந்தது. சென்னையில் மட்டும் 21 திருட்டு வழக்குகள் உள்ளன. இதுதவிர தமிழகம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தினகரனிடமிருந்து 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, 1,000 அமெரிக்க டாலர்கள், இரண்டு வாக்கி டாக்கிகள், கடப்பாரை, கயிறு, சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தினகரன் கைது குறித்து போலீஸார் கூறுகையில், ``தினகரனை தமிழக போலீஸார் மட்டுமல்லாமல் மற்ற மாநிலப் போலீஸாரும் தேடிவந்தனர். எங்களிடம்தான் முதலில் அவர் சிக்கிக்கொண்டார். சென்னை அண்ணாநகர் காவல் சரக மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் கொள்ளையடித்துள்ளார். ஆடம்பரமாக அவர் வாழ்ந்துள்ளார். தமிழகத்தில் கொள்ளையடித்துவிட்டு கேரளாவுக்குச் சென்றுவிடுவார். கேரளாவில் கைவரிசைக் காட்டிவிட்டு கர்நாடகாவில் தலைமறைவாகிவிடுவார். இதுபோல ஒவ்வொரு மாநிலங்களாகப் பதுங்கிய தினகரன், தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனே தனிப்படை போலீஸார் தினகரனின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரைப் பிடித்துள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தினகரனின் கூட்டாளி திருவாரூர் முருகன். இவரை நீண்ட காலமாக போலீஸார் தேடி வருகின்றனர். தினகரனும் திருவாரூர் முருகனும் பல இடங்களில் கொள்ளையடித்துள்ளனர். தற்போது தினகரன் சிக்கிக்கொண்டார். ஆனால், அவரின் கூட்டாளி திருவாரூர் முருகன் தலைமறைவாக இருக்கிறார். இவர்கள் இருவரும் கொள்ளையடிக்கச் செல்லும்போது போலீஸாரிடம் சிக்காமலிருக்க வாக்கிடாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர். செல்போனில் பேசினால் சிக்னல் மூலம் போலீஸார் கண்டறிந்துவிடுவார்கள். இதற்காகத்தான் வாக்கி டாக்கியை விலைக்கு வாங்கியுள்ளனர். தினகரன் கொள்ளையடித்தால் அவருக்கு வெளியிலிருந்து திருவாரூர் முருகன் வாக்கிடாக்கியில் தகவல் கொடுப்பார். இதுதான் அவர்களின் ஸ்டைல். மேலும், திருவாரூர் முருகன், கொள்ளையடித்த பணத்தில் பல நலத்திட்டங்களைச் செய்து சமுதாயத்தில் பெரிய மனிதர்போல வலம் வந்துகொண்டிருக்கிறார். 

கொள்ளையடித்த நகை, பொருள்களைப் பணமாக மாற்றிக் கொடுக்க நாகை மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன், காளிதாஸ் ஆகியோர் உதவியுள்ளனர். அவர்களையும் பிடித்துள்ளோம். மேலும், இவர்களின் கூட்டாளிகள் சிலர் சிறையில் உள்ளனர். தினகரனிடம் விசாரித்துவருகிறோம். அவர் குறித்து இன்னமும் திடுக்கிடும் தகவல்கள் உள்ளன" என்றார்.

தினகரன், திருவாரூர் முருகன் ஆகியோரின் கூட்டாளிகள் திண்டுக்கல்லைச் சேர்ந்த கோபால், புதுச்சேரியைச் சேர்ந்த ரகு, கார்த்தி, காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை அண்ணாநகர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்தும் ஒரு கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இவர்கள் 4 பேரும் புழல் சிறையில் உள்ளனர். திருவாரூர் முருகன் உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.