கேரளாவுக்கு விஜய் சேதுபதி, தனுஷ், நயன்தாரா நிதியுதவி!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ் நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளித்துள்ளனர். 

விஜய் சேதுபதி - தனுஷ்

கேரளாவில் விடாமல் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மேலும் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் நிலவி வருகிறது. கனமழையால் மாநிலம் மொத்தமும் பாதித்துள்ளதால் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தக் கூடுதல் உதவிகள் தேவைப்படுகின்றன என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று கேரளம் வருகிறார். அவர் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடவுள்ளார். இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது கடினமான பணியாக இருக்கும் என்பதால் நிவாரண பணிகளுக்கு அனைவரும் தாராளமாகப் பங்களிக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தும் விதமாகக் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளதுடன், அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என  நடிகர் சித்தார்த் கேரளா டொனேஷன் சேலஞ்ச் (#KeralaDonationChallenge) ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதேபோல் நடிகர் விஜய் சேதுபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சமும், நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், நடிகை நயன்தாரா ரூ.10 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர். முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் நிதியுதவி அளித்து உதவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!