வாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி! | Rameshwaram: All party members pays homage to Former PM Vajpayee

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (17/08/2018)

கடைசி தொடர்பு:21:20 (17/08/2018)

வாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி!

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் நேற்று மாலை இயற்கை எய்தினார். இதையடுத்து நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்திருந்தது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

ராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் சார்பில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த மௌன ஊர்வலம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நிறைவடைந்தது. அங்கு பி.ஜே.பி நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் குப்புராமு, ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க), நாசர்கான் (தி.மு.க), பாரிராஜன் (காங்), சிவா (மார்க்ஸிஸ்ட்), முருகானந்தம் (சி.பி.ஐ) உள்ளிட்ட பலர் இரங்கல் உரையாற்றினர். இதைத் தொடர்ந்து சர்வகட்சியைச் சேர்ந்தவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் வாஜ்பாய் நினைவாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இன்று காலை வாஜ்பாய் உருவப்படத்துக்கு ராமநாதபுரம் அரண்மனை முன்பாக பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் மலரஞ்சலி செய்தனர். அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செய்தார்கள்.