காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்!

காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

தென்மேற்குப் பருவமழை இந்த வருடம் பெய்யெனப் பெய்ததின் விளைவு, கர்நாடக அணைகள் அனைத்தும் நிறைந்தன. இதன் காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து அதிகமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணை கடந்த 5 வருடங்கள் கழித்து அதன் முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. அதுவும், இந்தாண்டு இரண்டுமுறை முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால், இப்போது மேட்டூரிலிருந்து இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வாய்ப்பிருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரியில் வந்த கட்டுக்கடங்காத வெள்ளம் தவிட்டுப்பாளையம் என்ற கிராமத்துக்குள் புகுந்தது. இதனால், 56 குடும்பங்கள் வெள்ள நீரில் தத்தளித்தனர். அவர்களை மீட்ட கரூர் மாவட்ட நிர்வாகம், மாற்று முகாம்களில் தங்க வைத்தது. அவர்களுக்கு உரிய உணவுக்கும் ஏற்பாடு செய்தது.

இந்நிலையில், பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ள தவிட்டுப்பாளையம் கிராம மக்களைத் தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று நேரில் சந்தித்தார். அந்த முகாம்களில் உள்ள பொதுமக்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு, பொதுமக்களுக்குத் தேவையான உணவு, பாய், போர்வை உள்ளிட்ட அடிப்படை உதவிகளை அமைச்சர் வழங்கினார். அதோடு, 'தவிட்டுப்பாளையத்தில் வெள்ளம் வடியும் வரை பொதுமக்கள் அனைவரும், இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்' என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். அதோடு அதிகாரிகளிடம், 'இன்னும் காவிரி கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளப் பாதிப்புகளில் மக்கள் பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வெள்ளம் குறித்த விழிப்பு உணர்வையும் தொடர்ந்து செய்யும்படி உத்தரவிட்டார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!