அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!

அ.தி.மு.க செயற்குழு 20-ம் தேதிக்கு பதிலாக 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செயற்குழு ஒத்திவைப்பு

அ.தி.முக செயற்குழு கூட்டம் வருகின்ற 20-ம் தேதி நடைபெறும் எனக் கட்சி சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், `20-ம் தேதி அன்று நடைபெறவிருந்த செயற்குழுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, 23-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒத்திவைப்பு காரணம் :

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசும் இதையே வழிமொழிந்து ஒருநாள் பொதுவிடுமுறை அறிவித்தது. இந்நிலையில், நேற்று தலைமைக் கழகம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் பிரதமர் மறைவுக்கு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், செயற்குழுவைக் கூட்டினால் சரியாக இருக்குமா என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்தே, செயற்குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!