வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (18/08/2018)

கடைசி தொடர்பு:07:18 (18/08/2018)

தமிழகத்தில் இன்றும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் 

கேரளா, கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியிருக்கும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

கனமழை

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. 

நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்திலுள்ள 26 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக உதகமண்டலம், பாபநாசம், பேச்சிப்பாறை, குளச்சல், குழித்துறை பகுதிகளில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. 

பலமான காற்று தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும். அதேபோன்று, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலமான காற்று தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 55-60 கி.மீ. வேகத்தில் வீசும். தமிழகத்தில் குளச்சல் - தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் வரும் 19-ம் தேதி வரை கடல் அலைகள் 11-14 அடி உயரத்துக்கு இருக்கும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.