வெளியிடப்பட்ட நேரம்: 08:03 (18/08/2018)

கடைசி தொடர்பு:08:07 (18/08/2018)

கேரளா, கர்நாடகா கனமழை எதிரொலி - தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ’ரெட் அலர்ட்’

கேரள மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி, கே.ஆர்.பி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேட்டூர் அணை ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர் உள்ளிட்ட எட்டு காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் பிராதான சாலை காவிரி வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

காவிரியிலிருந்து வெளியேறும் நீரில் அளவு தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் அதிக தண்ணீர் வருவதால் அதைக் காண மேட்டூர் அணைப் பகுதியில் மக்கள் குவிந்து வருகின்றனர். மேட்டூர் அணை முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்னும் 5 நாள்களுக்குக் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.