வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (18/08/2018)

கடைசி தொடர்பு:11:25 (18/08/2018)

``ஒருநாள் சம்பளத்தை கேரளாவுக்கு அளியுங்கள்”- நாட்டு மக்களுக்கு கிரண் பேடி வேண்டுகோள்

``ஒரு நாள் சம்பளத்தைக் கேரளாவுக்கு அளித்து உதவுங்கள்” என்று இந்திய மக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரண்பேடி

வரலாற்றில் இல்லாத அளவுக்கு கேரளத்தைச் சிதைத்துப் போட்டிருக்கிறது வெள்ளம். இயற்கையின் இந்தக் கோரத் தாண்டவத்துக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுகள் போன்ற அடிப்படைப் பொருள்களை அனுப்பும் பணியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரைப்படப் பிரபலங்கள் களம் இறங்கியுள்ளனர்.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ``கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கேரள அரசுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்வார். ஆனாலும், வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும். கேரளா மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டுவர நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் கேரளாவில் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க