வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (18/08/2018)

கடைசி தொடர்பு:12:20 (18/08/2018)

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 10 நாய்க் குட்டிகள்... மீட்கக் காரணமாக இருந்த தாய் நாய்

மீட்கப்பட்ட நாய் குட்டிகள்

திருப்பூர் அருகே நொய்யலாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறையினர் நீண்டநேரம் போராடி உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், கரூர் வழியாகக் காவிரியில் சென்று கலக்கிறது நொய்யல் ஆறு. திருப்பூரின் தெருக்களில் சுற்றித்திரியும் பெரும்பாலான தெருநாய்களுக்கு, நொய்யல் ஆற்றின் நடுவே உள்ள பாறை இடுக்குகள்தான் வாழ்விடமாக இருந்து வருகிறது. நொய்யலாறு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கும் காலங்களில் எல்லாம் பெரும்பாலான தெருநாய்கள் நொய்யலாற்றுப் பாறை இடுக்குகளில்தான் கூட்டம் கூட்டமாக முகாமிட்டிருக்கும். 

இந்த நிலையில், நேற்று இரவு நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, தண்ணீர் வரத்து அதிகமடைந்து அங்குள்ள பாறை இடுக்குகள் அனைத்தும் நீரில் மூழ்கத் தொடங்கின. இதனால் கடந்த சில நாள்களாக அந்தப் பாறை இடுக்குகளில் தங்கியிருந்த 10 நாய்க்குட்டிகள் நேற்றைய வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு, பாறை இடுக்குகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தன. அதைக்கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி, பாறை இடுக்குகளில் தவியாய் தவித்துக்கொண்டிருந்த அத்தனை நாய்க்குட்டிகளையும் பத்திரமாகக் மீட்டெடுத்தனர். அதை அப்போது ஆர்வத்துடன் நேரில் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் பலரும் ஆரவாரக் கூச்சலிட்டுக் கொண்டாடினர். அதையடுத்து, மீட்கப்பட்ட அத்தனை நாய்க்குட்டிகளுக்கும் அப்பகுதி மக்கள் உற்சாகமாகப் பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருள்களை உண்ணக் கொடுத்து மகிழ்ந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய நாய் குட்டிகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் சிலர், ``காசிபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் 10 நாய்க்குட்டிகளை ஈன்ற நாட்டு இன நாய் ஒன்று, அந்தக் குட்டிகள் அனைத்தையும் இப்பகுதி நொய்யலாற்றுப் பாறை இடுக்குகளில் வைத்துப் பராமரித்து வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், பாறை இடுக்குகளில் வசித்து வந்த குட்டிகள் அனைத்தும் அங்கிருந்து தப்பிக்க முடியாதபடி சிக்கிக்கொண்டன. இதனால் அந்த குட்டிகளின் தாய் நேற்றிரவு முதலே அப்பகுதியில் நின்றுகொண்டு குரைத்தவாறே இருந்தது. பாறையைப் பார்த்து தாய் நாய்க் குரைத்துக்கொண்டிருந்ததை எதேச்சையாகக் கண்ட எங்களுக்கு அதன்பிறகுதான் ஆற்றின் நடுவே நாய்க் குட்டிகள் தத்தளித்துக்கொண்டு இருப்பதே தெரியவந்தது. பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்களைப் வரவழைத்து அத்தனை ஜீவன்களையும் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டோம்'' என்றார்கள் பூரிப்புடன்.

தீவிரமாகப் போராடி நாய்க்குட்டிகளைப் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.