வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (18/08/2018)

கடைசி தொடர்பு:12:58 (18/08/2018)

'89 நாள்கள்... காலை இழந்த இன்ஜினீயர்' - ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப்பிறகும் விடிவுகாலம் பிறக்காத சோகக்கதை

ஸ்டெர்லைட் போராட்டத்தால் காலை இழந்த இன்ஜினீயர்

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வலது காலை இழந்தார் இன்ஜினீயர் பிரின்ஸ்டன். அவரின் சோகக்கதையை கண்ணீர் மல்க நம்மிடம் தெரிவித்தார் பிரின்ஸ்டனின் அம்மா பாஸ்கிளின். 

``எனக்கு ஒரே மகன் பிரின்ஸ்டன். டிப்ளமோ இன்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்தான். என்னுடைய கணவர் கிளாட்வின், சைக்கிள் கடை நடத்துகிறார். அந்த வருமானத்தை நம்பிதான் எங்கள் குடும்பம் உள்ளது. பிரின்ஸ்டனை நம்பிதான் நானும் அவரும் (கிளாட்வின்) இருந்தோம். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை வேலையை விட்டுவிட்டு தூத்துக்குடி வந்தான். இங்கு குறைந்த சம்பளம் என்றாலும் சந்தோஷமாக நாங்கள் வாழ்ந்துவந்தோம். தூத்துக்குடியில் 6 மாதங்களாக வேலை பார்த்துவந்தான். இந்தச் சமயத்தில்தான் மே 22-ம் தேதி வழக்கம்போல வீட்டிலிருந்து வேலைக்குப் போனான். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது  நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குண்டு பிரின்ஸ்டனின் வலதுகாலில் முழங்கால் பகுதியில் பாய்ந்தது. குண்டுபாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும் பதறிப் போய்விட்டோம். ஆஸ்பத்திரிக்கு நானும் அவரும் சென்றோம். மயக்க நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் பிரின்ஸ்டன். அவனுடைய அந்த நிலைமையைப் பார்த்ததும் நான் மயங்கிவிட்டேன்'' என்றவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. 

அவருக்கு ஆறுதல் கூறினோம். சில நிமிட இடைவெளிக்குப்பிறகு அவரே தொடர்ந்தார். ``வலது காலை எடுக்கவில்லை என்றால், பிரின்ஸ்டனின் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் கூறினர். அறுவை சிகிச்சை மூலம் அவனின் கால் எடுக்கப்பட்டது. 21 வயதில் காலை இழந்த பிரின்ஸ்டனின் நிலைமை வேறுயாருக்கும் வரக்கூடாது. ஓடியாடி துள்ளிக்குதித்த அவன், என் கண் முன்னால் நடக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்க முடியவில்லை. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 89 நாள்களாக சிகிச்சை பெற்றுவருகிறான். எங்களுக்கு ஆறுதல்கூற வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, கலெக்டர் சந்தீப் தந்தூரி ஆகியோர் எவ்வளவு செலவானாலும் பிரின்ஸ்டனுக்கு செயற்கை கால் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறினர். அதை முழுமையாக நம்பினோம். ஒன்றரை லட்சம் செலவில் ஒரு செயற்கை காலுக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த செயற்கை கால் கொண்டு பிரின்ஸ்டனால் சரிவர நடக்க முடியவில்லை. இந்தத் தகவலை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உடனே அவர், உணர்வுடன் கூடிய செயற்கை காலுக்கு ஏற்பாடுச் செய்வதாகக் கூறினார். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், இன்னமும் செயற்கை கால் வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரியிலேயே முடங்கி கிடக்கிறான். அவனைக் கவனிக்க அவனுடைய அப்பா கிளாட்வின் அங்கேயே இருக்கிறார். இதனால், செலவுக்குகூட பணமில்லாமல் வறுமையில் எங்கள் குடும்பம் தவிக்கிறது. எனவே உடனடியாக செயற்கை காலை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்றோம். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர், `உங்கள் மகன் என்ன சுதந்திர போராட்டத்தின்போதா காலை இழந்தான். நீங்கள் படுகிற அவசரத்துக்கெல்லாம் செயற்கை காலை ஏற்பாடு செய்துதர முடியாது' என்று அவமரியாதையாக பேசுகிறார். காலை இழந்த வலிகளைவிட அந்த அதிகாரியின் அவமரியாதை பேச்சுதான் எங்களுக்கு அதிக வேதனையாக இருக்கிறது" என்றார் கண்ணீர்மல்க 

 ஸ்டெர்லைட் போராட்டத்தால் காலை இழந்த இன்ஜினீயர் பிரின்ஸ்டனின் குடும்பம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரின்ஸ்டனிடம் பேசினோம். ``மருத்துவமனையில் வாட்டர் ப்ரூப் செயற்கை கால், தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், கலெக்டர் அலுவலகத்திலிருந்து எந்தவித ஆர்டரும் இல்லாததால் செயற்கை கால் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. முதலில் ஏற்பாடு செய்த செயற்கை காலின் விலை 1,00,000 ரூபாய்தான். அந்த காலைக் கொண்டு சரியாக நடக்க முடியாது. மேலும், தண்ணீரில் நடந்துச் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். இதனால்தான் அதைவிட விலை உயர்ந்த செயற்கை காலை கேட்டோம். அதன்விலை ஏழு லட்சம் ரூபாய் என்பதால் காலதாமதமாகிவருகிறது. அந்த செயற்கை கால் வந்தால்கூட ஒரு மாதம் திருச்சியில் தங்கியிருந்து பயிற்சி பெற வேண்டும். நானும், என் அப்பாவும் வேலை செய்யாததால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. போராட்டத்தில்கூட நான் கலந்துகொள்ளவில்லை. வேலைக்குச் சென்ற எனக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைத்துள்ளது. செயற்கைக் காலை பொருத்திய பிறகு நான் சம்பாதித்துதான் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எல்லோரைப் போல எனக்கும் காயமடைந்தவர்களுக்கான 5 லட்சம் ரூபாய்தான் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய எதிர்காலத்தைக் கருதி அரசு நல்ல நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார். 

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் தந்தூரியிடம் பேசினோம். ``பிரின்ஸ்டனுக்கு முதலில் கொடுத்த செயற்கை காலுக்குப்பதிலாக அட்வான்ஸ் மாடல் செயற்கை காலை அவர் கேட்டுள்ளார். இதனால் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். வந்தவுடன், செயற்கை கால் வழங்குவோம்'' என்றார். கலெக்டர் அலுவலகத்தில் பிரின்ஸ்டனின் உறவினர்கள் மனு கொடுக்க வந்தபோது அவமரியாதையாக அதிகாரிகள் பேசியதாக குற்றம் சாட்டுகின்றனரே என்று கேட்டதற்கு, ``பிரின்ஸ்டனின் அம்மாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவமரியாதையாகப் பேசியதற்கான வாய்ப்புகள் குறைவு" என்றார்.