கேரள மக்களுக்குத் தென் தமிழக மக்கள் இப்படியும் உதவலாம்! | How to help kerala people?

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (18/08/2018)

கடைசி தொடர்பு:12:40 (18/08/2018)

கேரள மக்களுக்குத் தென் தமிழக மக்கள் இப்படியும் உதவலாம்!

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டமும் ஒன்று. அதேநேரம், அதிக பாதிப்புகளைச் சந்தித்த மாவட்டமும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கிதான். இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கும் பலரும் அம்மக்களுக்கு உதவ எண்ணம் இருந்தும் எப்படி உதவுவது என்று தெரியாமல் இருப்பர். அவர்களுக்காக...

கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்

இடுக்கி மாவட்டத்துக்குள் செல்ல மூன்று பிரதான வழிகள் உண்டு. தேனி மாவட்டம், கம்பம்மெட்டு வழியாகச் செல்லலாம். போடி மெட்டு வழியாகச் செல்லலாம். அடுத்ததாக குமுளி வழியாகச் செல்லமுடியும். இந்த மூன்று வழிகளில் இரண்டு வழிகள் தற்போது தடைப்பட்டிருக்கிறது. குமுளி மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் போடிமெட்டு பூப்பாறையிலும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மீதம் உள்ள கம்பம்மெட்டு சாலை வழியாக இடுக்கி மாவட்டத்துக்குள் நுழையலாம். கம்பம்மெட்டில் இருந்து இடுக்கி மாவட்டத்தின் பிரதான நகரமான கட்டப்பனைக்கு நம்மால் செல்ல முடியும். இந்தப் பாதையில் தற்சமயம் எந்த வெள்ள பாதிப்பும் இல்லை.

நிவாரணப் பொருள்கள்

கட்டப்பனையில் உள்ள சென்ட் ஜார்ஜ் பள்ளியில்தான் நிவாரணப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கேரள மக்களுக்குத் உதவும் எண்ணம் கொண்டவர்கள் தங்களால் இயன்ற வகையில் பொருள்களை எடுத்துக்கொண்டு கம்பம்மெட்டு வழியாகச் கட்டப்பனை அடைவது சரியாக இருக்கும். கட்டப்பனையில் சேகரிக்கப்படும் பொருள்கள், மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அப்பணியை மாவட்ட நிர்வாகம் பார்த்துக்கொள்கிறது. காய்கறி, பழங்கள், பால்பவுடர், அரிசி போன்றவை தேவைக்கு இருப்பதாகவும், அம்மக்களுக்குத் தேவையான உடைகள், நாப்கின் பற்றாக்குறையாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பம்மெட்டு சாலையின் தமிழக − கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பதிவு செய்வது அவசியம். செல்லும் வாகனத்துக்குச் சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும். எங்கெங்கு கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என சோதனைச்சாவடியில் அறிவுரைகள் வழங்கப்படும். அதற்கு ஏற்ப சென்று பொருள்களைச் சேர்த்துவிட்டு வரலாம்.