நாலாபக்கமும் வெள்ளம்... மணல்திட்டில் தவிக்கும் 50 மாடுகள்... அச்சத்தில் உரிமையாளர்கள்

தர்மபுரி மாவட்டம்,  ஒகேனக்கல் அடுத்துள்ள ராசிமணல் திட்டு, தமிழக -கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த ராசிமணல் ஒரு குட்டித் தீவு எனலாம். மேய்ச்சலுக்குத் தேவையான புல்வெளிகளுடன் காணப்படும் இந்த மணல் திட்டில் வனவிலங்குகள் அதிகளவில் உணவுக்காக வந்து சேரும் இடமாக ராசிமணல் இருந்து வருகிறது. 

ராசிமணலில் சிக்கியுள்ள மாடுகள்

பெண்ணாகரம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் மூதாதையர் காலத்திலிருந்தே ஒகேனக்கல் வனப்பகுதிகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் ஒகேனக்கல், பிலிகுண்டு, ராசிமணல் வனப்பகுதிகளில் தங்கி 500-க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பால் மற்றும் கன்றுகளை விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

ராசிமணல் திட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சுந்தரம், கோவிந்தராஜ் ஆகியோர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக 50 மேற்பட்ட மாடுகளுடன் ராசிமணல் திட்டில் விட்டுள்ளனர். அந்தச் சமயத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 2,00,000 கனஅடி அளவுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அளவு கடந்த காவிரி வெள்ளப்பெருக்கால் மேய்ச்சலுக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிடவே, 50 மாடுகள் ராசிமணல் திட்டில் சிக்கிக் கொண்டது. மணல்திட்டைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துகொண்டதால் மாடுகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து பார்த்தபோது காவிரியில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளை மீட்க முடியாமல் திரும்பி விட்டனர். இதனால் தங்கள் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகள் கண்முன்னே வெள்ளத்தில் அடித்துச் சென்று விடுமோ என்ற அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். 

காவிரி ஆற்றில் விநாடிக்கு 2,00,000 கனஅடி வரை தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் ராசிமணல் திட்டில் சிக்கியுள்ள 50 மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 10 நாள்களாக உணவு இல்லாமல் சிக்கித் தவித்து வரும் வாயில்லாத அந்த 50 ஜீவன்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர் உரிமையாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!