வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (18/08/2018)

கடைசி தொடர்பு:14:45 (18/08/2018)

கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! 

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, தமிழக அரசு சார்பில் மேலும் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கேரளா

கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காத துயரத்தைக் கேரளா சந்தித்து வருகிறது. ஆண்டுதோறும் வழக்கம்போல் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை, இந்த ஆண்டு கனமழையாகக் கொட்டி கேரளாவில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய பருவமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால், அணைகள் அனைத்தும் நிரம்பி, அவற்றின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என மாநிலத்தின் அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன. கூடவே, நிலச்சரிவினால் கட்டடங்கள், மரங்கள் என அனைத்தும் பலத்த சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் சாலைகள் பிளக்கப்பட்டு, போக்குவரத்துச் சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. 

எடப்பாடி பழனிசாமி

வெள்ள பாதிப்பிலிருந்து கேரளாவை மீட்க மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளன. முன்னதாக, கடந்த 10-ம் தேதியன்று தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 கோடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அளிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிலிருந்து இதுவரை பலகோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இதனுடன், 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 15 ஆயிரம் லிட்டர் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10,000 போர்வைகள், அத்தியாவசிய மருந்துகளுடன், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்கள் ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.