போலீஸிடம் தகராறு செய்தவருக்கு இப்படியும் ஒரு தண்டனை!

மதுபோதையில் வந்தவருக்கு புதுவித தண்டனை!

போலீஸாருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞருக்கு, 'டிராஃபிக் போலீஸாருடன் இணைந்து, 10 நாள் வரை  போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்' என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர், கடந்த 27-ம் தேதி மாலை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் போதையில் தகராறு செய்திருக்கிறார். இந்தச் சம்பவம்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. 

போக்குவரத்து விதிகளை மதிக்காமல், மது அருந்திவிட்டு பைக் ஓட்டியதற்காக அபராதம் செலுத்துமாறு கூறிய போலீஸாரிடம், குடிபோதையில் இருந்த சுதர்சன், அபராதம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  அதுமட்டுமல்லாமல் பொது இடத்தில் போலீஸைப் பற்றி  தரக்குறைவாகப் பேசினார். இதை யாரோ வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்ப, அது வைரலாகி, அந்தச் சம்பவம் பரபரப்பானது.

இதைத் தொடர்ந்து, சுதர்சனைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டிச்செல்லுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் இருந்தபோது, மது போதையில் தவறாக நடந்துகொண்டதாகவும், அருகிலிருந்த  பொதுமக்கள்  சிலர் கைதட்டியதால்  உணர்ச்சிவசப்பட்டு இன்னும் அதிகமாகப் பேசிவிட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டார் சுதர்சன். அந்த வீடியோ மேலும் வைரல் ஆனது.

இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த சுதர்சனின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஞானசம்பந்தம், 'இன்றிலிருந்து 10 நாள்களுக்கு, காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ராஃபிக் போலீஸாருடன் இணைந்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்' என்ற நிபந்தனையோடு, சுதர்சனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, காந்திபுரம் பகுதிகளில் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் போலீஸாருடன் இணைந்து பணியாற்றிவருகிறார் சுதர்சன். நீதிபதியின் இந்த உத்தவுக்கு, பாராட்டுகள் குவிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!