அதிகாரிகளின் பார்வைக்காக ஏங்கும் ஆலவாய் நகரத்துக் கோட்டை! | People urges government to take action to do renovation works in historical building near madurai periyar bus stand

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (18/08/2018)

கடைசி தொடர்பு:18:35 (18/08/2018)

அதிகாரிகளின் பார்வைக்காக ஏங்கும் ஆலவாய் நகரத்துக் கோட்டை!

நகரத்து வேகமும், புகையின் எரிச்சலும், வாகன நெரிசல்களும் வாழ்வைச் சூழ்ந்துகொண்டு நேர்கோட்டில் நம்மை உந்துகின்றன. இதனாலேயே, பக்கவாட்டில் ஒளிருகின்ற பழமையைநோக்கி நம் கண்களைச்செலுத்திட நமக்கு வாய்ப்புக் கிடைப்பதே இல்லை. மதுரை பெரியார் பேருந்துநிலையத்தின் எதிரே, காம்ப்ளக்ஸின் பின்னணியில் அமைந்திருக்கும் கோட்டை, மதுரையின் பல நூற்றாண்டுக்காலத்து வரலாற்றினைக் கடந்துவந்த நினைவுகளோடு கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது.

மன்னராட்சி, ஆங்கிலேயராட்சி, மக்களாட்சி எனப் பல ஆட்சிகளைக் கடந்து கண்ணெதிரே சாட்சியாய் விரிகிறது, இந்தப் பழம்பெரும் கோட்டை. திருமலை நாயக்கர் உள்ளிட்ட மன்னர்கள் இதைக் கங்காணிக்கோட்டையாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்களது காலத்தில், இங்கிருந்து பார்த்தால் வடக்கே அலங்காநல்லூர் பகுதியும், கிழக்கே சிலைமான் ஊரும், மேற்கே காளவாசலும், தெற்கே திருப்பரங்குன்றம் மலையும் தெரியுமாம். இதனாலேயே இந்தக் கோட்டை 'கண்காணி'க்கோட்டையாகப் பெயர்பெற்றதாம்.

கோட்டையின் மேற்புறத்தில் அமைந்துள்ள பூங்காவில், ஓங்கி உயர்ந்து சூழ்ந்திருக்கும் மரங்கள், சின்னச்சின்ன செடிகள், மெத்தென்ற புல்வெளிகள் என அவ்வளவும் ரம்மியமாய் நம் கண்களைப் பறிக்கின்றன. நடுவே, முனியாண்டி கோயில், அதைச் சுற்றிலும் பொதுமக்கள் ஓய்வாய் அமர்வதற்காக அமைக்கப்பட்ட பளிங்குத்தளங்கள் எனப் பூங்காவுக்கு இவை இன்னும் கூடுதல் அழகைச் சேர்க்கின்றன.

பூங்காவுக்கு தினசரி வந்து ஓய்வெடுத்துச் செல்லும் ஒரு பெரியவரிடம் பேசியபோது, "இதெல்லாம் இப்போ வந்ததுதான் தம்பி. சில வருஷத்துக்கு முன்னாடி வரைக்குமே இந்தக் கோட்டை, கார்ப்பரேஷன் ஆபீஸாதான் இருந்துச்சு. இது பூராவும் அப்பிடியே காஞ்சுகெடந்துச்சு. அந்த டைம்ல இருந்த எந்த ஆபீஸரும் இதையெல்லாம் கண்டுக்கிடவே இல்லை. பிற்பாடுதான், 2010 - 2011 வருஷத்துல இங்க பூங்கா கட்டுறதுக்கு வழிவகை செஞ்சாங்க" என்று வாஞ்சை மொழியோடு விளக்கினார்.

பொறுமையாக கட்டுச்சோற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த கிராமத்துப் பெரியவரிடம், "எய்யா, இந்த சுவத்துக்குப் பின்னாடி நிறைய களைங்க வளர்ந்திருக்கய்யா, இதுங்க கோட்டையவே காலி பண்ணிப்புடுமே. அம்புட்டையும் வேரறுக்கச் சொல்லேன்யா, புண்ணியமாப்போகும்" என்று பூங்கா நலன் கருதிப் புலம்பிவிட்டுச் சென்றார். வரலாற்றுச் சின்னமெனத் தெரிந்திருந்தும் அதன் வாயிலை போஸ்டர்கள் ஒட்டிப் புண்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பூங்கா புல்வெளிகளில் ஆங்காங்கே மதுபாட்டில்களும் தென்படுகின்றன.

இந்தக் கோட்டையில், ஆங்கிலேயர் காலத்துக் கட்டடங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கோட்டைக்கு அருகில் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டதால், இங்கே செயல்பட்டுவந்த அலுவலகப்பணிகள் அனைத்தும் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டன. இதனால், இங்கு இருக்கும் பழைய கட்டடங்கள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இதுகுறித்து மாநகராட்சிப் பணியாளர் ஒருவரை சந்தித்தபோது, "இந்த அறைகளை குடோனாகப் பயன்படுத்துறோம். பொருள்களை இங்க எறக்குறது, வேற எடங்களுக்கு மாத்துறதுனு இந்த அறைகள் பயன்படுது, சார்" என்றார்.

இந்தக் கோட்டையின் பழைய கட்டடங்களைப் புனரமைத்து, தொல்லியல் ஆய்வுக்காகவோ, நூலகமாகவோ, சுற்றுலா விவரங்கள் வழங்கும் இடமாகவோ இந்த அறைகளைப் பயன்படுத்தலாம் எனக் கோருகின்றனர் இப்பகுதியினர். இப்படிச் செய்வதால், இந்தப் பூங்கா மரங்கள் தரும் இதத்தைவிட கூடுதல் பயன் பெறுவார்கள், இங்கு வரும் பொதுமக்கள். கைவிடப்பட்ட இதுபோன்ற பழைய கட்டடங்களைப்  புதுப்பிதுப் பயன்படுத்தினால், அரசாங்கப் பயன்பாட்டுக்காக புதிய கட்டடம் கட்டவேண்டிய அவசியமும் செலவும் குறையும். அதிகாரிகள்தான் மனசுவைக்கணும்.