முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை! - ஓ.பி.எஸ் திட்டவட்டம்

தொடர்மழை காரணமாகத் தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்  ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழகம் கேரளா இடையிலான போக்குவரத்து கடந்த இரண்டு நாள்களாக முடங்கியுள்ளது. சாலையைச் சீரமைக்கும் பணி வேகமாக நடந்துவரும் சூழலில், இன்று அப்பணிகளை நேரில் பார்வையிட்டு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆய்வு

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசியவர், "முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அதைக் காவிரி தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதனால் அச்சப்படத் தேவையில்லை" என்றார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க கேரளா கோரிக்கை வைக்கிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "தற்போதைய நிலவரப்படி, 142 அடியாக உள்ள அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அணை பலமாக இருக்கிறது. ஏன் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, "கேரள மக்களுடன் நாம் சகோதரத்துவத்துடன் இருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆய்வு

அவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அவர்களின் பாதிப்பையும் பார்த்துதான் நடந்துகொண்டிருக்கிறோம்" என்றார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலச்சரிவு நடந்த இடத்தை ஓ.பி.எஸ் பார்வையிட்டு ஆய்வு செய்யும்போது, தேனி எம்.பி பார்த்திபன், எம்.எல்.ஏ ஜக்கையன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!