20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு! - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல்  | Police arrests sea cucumber smuggling gang in Rameshwaram

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (18/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (18/08/2018)

20 ரூபாய் நோட்டின் எண் மூலம் சீக்ரெட் கோடு! - தமிழக கடலில் நடந்த கடல் அட்டை கடத்தல் 

கடல் அட்டை

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடல் வழியாகக் கடல் அட்டைகளைக் கடத்தியவர்கள் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது 20 ரூபாய் நோட்டின் எண்களைச் சீக்ரெட் கோடாகப் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. 

ராமேஸ்வரம் தோவாளை கிராமத்திலிருந்து இலங்கைக்குக் கடல் வழியாகக் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகத் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் ஏ.டி.ஜி.பி வன்னிய பெருமாளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம், ரகசியமாகப் படகில் கடலில் சென்றனர். அங்கு நீண்ட நேரம் கடத்தல் கும்பலைத் தேடினர். இந்தச் சமயத்தில் ராமேஸ்வரம் தோவாளை கிராமத்திலிருந்து புறப்பட்ட படகில் கடல் அட்டைகள் இருந்ததைப் போலீஸார் கண்டுப்பிடித்தனர். உடனடியாகப் படகில் சென்று கடத்தல் கும்பலைப் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 1,200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் அட்டைகளைக் கடத்திய தோவாளை கிராமத்தைச் சேர்ந்த மலையாண்டி, காசிம் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய 20 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன. அதுபோலதான் கடல் அட்டைகளைக் கடத்தும் கும்பல் கையில் 20 ரூபாய் நோட்டுக்களின் எண்கள் இருந்தன. ஜி.பி.ஆர்.எஸ் கருவிகளும் இருந்தன. 20 ரூபாய் நோட்டுக்களின் எண்களை இலங்கையில் உள்ளவர்களிடம் கடத்தல் கும்பலைத் சேர்ந்தவர்கள் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே கடல் அட்டைகள் கைமாற்றப்படும். அதற்குப் பதிலாக இலங்கைக் கும்பல் தங்கத்தைக் கொடுப்பார்கள்" என்றனர். 

இதையடுத்து புதுக்கோட்டை ஜெகநாதபட்டினம் கடற்கரைப் பகுதியில் ஆளில்லாத பைபர் படகு நின்றது. அந்தப்படகைப் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, 16 பண்டல்களில் 270 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய் என்று போலீஸார் தெரிவித்தனர். கஞ்சா பண்டல்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்தபோது அந்தப் படகு, ஜெகநாதப்பட்டினத்தைச் சேரந்த அரபாத் அலி என்பவருக்குச் சொந்தமானது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.