தூத்துக்குடி கோயில் திருவிழாவில் மாட்டுவண்டிப் பந்தயம்! - சீறிப்பாய்ந்த காளைகள்

சாத்தான்குளம்  பன்னம்பாறை, சுடலை தளவாய் மாடசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப்  பந்தயம் நடைபெற்றது.  இதில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மாட்டுவண்டிகள்  சீறிப் பாய்ந்தோடின.

மாட்டுவண்டிப் பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள பன்னம்பாறை, முறம்படி ஸ்ரீசுடலை தளவாய்  மாடசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிறிய வண்டி மற்றும் பெரிய  மாட்டுவண்டிப்  பந்தயம் நடந்தது. இதில், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பெரிய மாட்டுவண்டிகள், 16 சிறிய மாட்டுவண்டிகள் என மொத்தம் 24 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.  

மாட்டுவண்டிப் பந்தயம் துவங்குவதற்கு முன், காளைமாடுகளுக்கு சாம்பிராணி காட்டப்பட்டது. பின்னர், போட்டிகள் துவங்கின. முதலில் சிறிய மாட்டுவண்டிப் பந்தயமும், இரண்டாவதாகப் பெரிய மாட்டுவண்டிப் பந்தயமும் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டிப் பந்தயம் 10 மைல் தூரமும், சிறிய மாட்டுவண்டிப் பந்தயம்  6 மைல் தூரமும் நடத்தப்பட்டது. 

பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை நெல்லை மாவட்டம் மருகால்குறிச்சியைச் சேர்ந்த  சுப்பம்மாள் என்பவரின் மாட்டுவண்டியும், இரண்டாம் இடத்தை தூத்துக்குடி மாவட்டம் சங்கரபேரியைச் சேர்ந்த  ஆறுமுகப்பாண்டியன் என்பவரது மாட்டுவண்டியும், மூன்றாம் இடத்தை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டி.எஸ்.பி., வெங்கடேஷின் வண்டியும் பெற்றன.

அதேபோல, சிறிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் முதல் இடத்தை நெல்லை மாவட்டம் முத்தூர் முத்துமாடசாமி என்பவரது மாட்டுவண்டியும்,  இரண்டாம் இடத்தை  தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த கருணாகரன் என்பவரது மாட்டுவண்டியும், மூன்றாம் இடத்தை நெல்லை மாவட்டம் நாலந்தூர் உதயபாண்டியன் என்பவரது மாட்டுவண்டியும் பெற்றன. பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வண்டிகளில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதேபோல, சின்ன மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக 23 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரமும் வழங்கப்பட்டது. இறுதியில், வெற்றிபெற்ற காளைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!