வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (18/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (18/08/2018)

கேரளாவுக்கு உதவ ஒருமாத ஊதியத்தை அளிக்க முன்வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்!

கேரளாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க ஆம்ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் முடிவுசெய்துள்ளனர். அதேபோல, தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்கள் ஒரு மாத ஊதியத்தைத் தர முன்வந்துள்ளனர்.

கேரளா வெள்ளம்

வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடமின்றி அம்மாநில மக்கள் தவித்துவருகின்றனர். மழை மற்றும் நிலச்சரிவுகளால், உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.  பேரிடர் மீட்புப்  படையினர், மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள், முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களும், மாநில மக்களும் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப்சிங் சுரேஜ்வாலா, `கேரளாவுக்கு உதவும் வகையில், எங்கள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள், கவுன்சிலர்கள், ஒரு மாத ஊதியம் வழங்குவார்கள்.கேரளாவுக்குத் தேவையான பொருள்களை அனுப்ப குழு ஒன்று அமைக்கப்படும்' என்றார். அதேபோல, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை கேரளாவுக்குத் தர முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.  இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் ஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாகக் கொடுக்க முன்வந்துள்ளனர்.